பிரசாரம், பேரணி, வாக்குசேகரிப்பு எனத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. களத்தில் நேருக்குநேர் மோதும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
அதன்படி, வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.சோனியா ஆகிய இருவரும் நேற்றைய தினம் தங்களின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
உறுதிமொழி பத்திரத்துடன் அவர்கள் கணக்கு காட்டியுள்ள சொத்து மதிப்பும், தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வினோத் கண்ணன் தேர்தல் களத்துக்கு முதல்முறையாக வந்திருக்கிறார். தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ.1,49,29,432 மதிப்பில் இருப்பதாகவும், தனது மனைவி எழிலரசி பெயரில் 54,94,436 ரூபாய் மதிப்பிலும், மகள் ஸ்ரீவித்யா பெயரில் 7,00,400 ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் வினோத் கண்ணன்.

கையில் ரொக்கமாக தன்னிடம் 1,25,550 ரூபாயும், தன் மனைவியிடம் 10,000 ரூபாய் இருப்பதாகவும், தனது பெயரில் ஒரு மினி டிரக் மற்றும் 7 கார்கள் இருக்கின்றன எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இவை அனைத்தும், அசையும் சொத்துகள் பட்டியலில் அடக்கமாகிறது.
அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரில் ரூ.62,68,000 மதிப்பிலும், தனது மனைவி மற்றும் தனது மகள் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆக, அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக 2,73,92,268 ரூபாய்க்கு இருப்பதாக கணக்குக் காட்டியிருக்கிறார் வினோத் கண்ணன்.