இத்தலத்தில் உற்சவர் அழகிய திருவடிவோடும் தேவியர் இருவரோடும் காட்சி தருகிறார். உட்பிராகாரத்தை வலம் வருகையில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், தேவியர்களோடு கூடிய நவகிரகங்கள், சிவலிங்கங்கள் எனப் பல சந்நிதிகள் உள்ளன.
ஆலயத்தின் வெளிப்புறம் மலையின் வலதுபுறம் ஒரு பாறையின் மேல் வளர்ந்துள்ள பெரிய ஆலமரம் ஓர் அதிசயம் எனலாம். ஆலயத்தின் தென்புறத்தில் இரண்டு வற்றாத சுனைகள் உள்ளன. இச்சுனைகளின் நீர் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் உள்ளது.
இதனால் இவற்றை வள்ளி, தெய்வானைச் சுனைகள் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயத்தின் வலதுபுறமாக சமீபத்தில் ஸித்தியான ஸ்ரீராமகிருஷ்ண சாது அவர்களின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் புதிய பொலிவுடன் திகழக் காரணமாக இருந்தவர் இந்த மகான். ஸ்ரீராமகிருஷ்ண சாது 1930-ம் ஆண்டு நீலகிரிப் பகுதியில் பிறந்தார். சிறுவயது முதலே ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொண்டு வளர்ந்து வந்தார்.
உள்ளொளிப் பெருக்கி, உண்டியைச் சுருக்கி, உலகத்து உயிர்களையெல்லாம் நேசித்து உவப்பிலா ஆனந்தம் பெற்று வாழ்ந்தார். இறைவனின் பெருங் கருணையால் கனவில் தரிசனம் பெற்றநிலையில், அவருக்கு, ‘பாலமதி மலைக்குச் செல்’ என்ற உத்தரவும் வந்தது. எங்கெங்கோ விசாரித்தும் அவருக்கு பாலமதி எங்கிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை.
இந்நிலையில் ஒருமுறை திருப்பதிக்குச் சென்றார் சாது ஸ்வாமிகள். அங்கு பாலமதியைச் சேர்ந்த ஒரு அன்பரைச் சந்தித்து அந்தத் தலத்தின் பெருமைகள் அறிந்து அவரோடு இங்கு வந்தார்.
1971-ம் ஆண்டு தனது 41-ம் வயதில் வந்த ஸ்வாமிகள், 47 ஆண்டுகள் இங்கேயே வாழ்ந்து சிதிலமடைந்து கிடந்த இந்தக் குழந்தை வேலாயுத ஸ்வாமி ஆலயத்தைப் புனரமைத்தும் கொடுத்தார்.
அப்படி அவர் புனரமைத்துக் கொடுத்த ஆலயத்தை வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். அங்கேயே ஜீவசமாதி அடைந்த ராமகிருஷ்ண சாதுவின் சந்நிதியிலும் வழிபடுங்கள். வாழ்வில் வளமும் நலமும் நிச்சயம் கிடைக்கும்.