வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பாஸ்மார்பெண்டா மலை கிராம வனப்பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 7 வயது ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்துக் கிடந்தது. அதைத்தொடர்ந்து, நவம்பர் மாதம் பேரணாம்பட்டு அருகே சிந்தக் கனவாய் கிராம ஓடையிலும் சுமார் 6 வயது ஆண் யானை ஒன்று தும்பிக்கையில் ரத்தக் காயத்துடன் உயிரிழந்துக் கிடந்தது. இதையடுத்து, அண்மையில் சாத்கர் மலை அல்லேரியில் ஒரு குட்டி யானை, பெண் யானை, ஆண் யானை என 3 யானைகள் அழுகிய நிலையில் இறந்துக் கிடந்தது, வனத்துறையினரைப் பேரதிர்ச்சிக்குள்ளாகியது.
யானைகள் தொடர் உயிரிழப்பு குறித்து தமிழக வனத்துறை சிறப்புப் புலனாய்வு பிரிவு இயக்குநர் ராகுல் தலைமையில் மண்டல வனப் பாதுகாவலர்கள் பெரியசாமி, மாரிமுத்து, புலனாய்வு பிரிவு குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில், பாஸ்மார்பெண்டா பகுதியில் சடலமாகக் கிடந்த ஆண் யானையின் தந்தமும், அல்லேரியில் இறந்துகிடந்த ஆண் யானையின் தந்தமும் மாயமாகியிருந்ததும் தெரியவந்தது. `தந்தங்களைக் கண்டுபிடித்தால், யானைகளின் மர்ம மரணம் பற்றிய தகவலும் வெளிச்சத்துக்கு வரும்’ என்ற கோணத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறையினர் வீடு, வீடாகச் சோதனை நடத்தினர்.
அப்போது, அரவட்லா கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (21) என்ற இளைஞர், பாஸ்மார்பெண்டா பகுதியில் இறந்துகிடந்த யானையின் தந்தங்களை உருவி எடுத்து, தனது உறவினர்களான சேராங்கல் கிராமத்தைச் சேர்ந்த மணி (22), எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி (24) ஆகியோருடன் சேர்ந்து சேராங்கல் வனப்பகுதியிலுள்ள பாறைக்கு இடையே மறைத்துவைத்திருப்பதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 இளைஞர்களையும் தேடிப்பிடித்த வனத்துறையினர், அவர்கள் பதுக்கிவைத்த இடத்துக்கும் அழைத்துச்சென்றனர். அங்கிருந்து கைப்பற்றப்பட்ட தந்தங்கள் மேற்கண்ட சம்பவங்களில் இறந்த யானைகளில் இருந்து எடுக்கப்பட்டவை இல்லை எனத் தெரியவந்ததும், வனத்துறையினர் குழம்பிப்போயினர். `இவை சுமார் 40 வயதுடைய யானையின் தந்தங்கள்’ என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
அப்படியெனில், `இந்த யானை எங்கு இறந்தது? மேற்கண்ட சம்பவங்களில் இறந்த யானைகளின் தந்தங்கள் யாரிடம் இருக்கிறது?’ என கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக புலன் விசாரணையில் அடுத்தடுத்து விடைத்தெரியாத பல்வேறு விவகாரங்கள் வெளியில் வரத்தொடங்கியிருக்கின்றன. இதையடுத்து, பிடிபட்ட 3 இளைஞர்களையும் கைதுசெய்த வனத்துறையினர், அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.