வேலைநிறுத்தம் வாபஸ்: 12 நாட்களுக்கு பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்! | Strike called off Rameswaram fishermen went fishing after 12 days

1324730.jpg
Spread the love

ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று 12 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிக்கச் சென்றனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று கடந்த மாதம் 29-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 17 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனையடுத்து இம்மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 30-ம் தேதியிலிருந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி மீனவர்கள் 17 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதித்து, அனைவரையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதையடுத்து, ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், 12 நாட்களுக்கு பிறகு, 361 விசைப்படகுகளில் இன்று (அக்12) மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதுகுறித்து ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா கூறியதாவது: “மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதையடுத்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றோம்.

எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகள், இந்திய தூதரகம் மற்றும் மீனவர்களுக்கான அபராதத்தொகையை தங்களது சொந்த பணத்திலிருந்து செலுத்திய மீன்வளத்துறை அமைச்சர் அனிதார ராதாகிருஷ்ணன் மற்றும் ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் மத்திய, மாநில அரசுகள், சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள எஞ்சிய மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதுடன், நடுக்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *