”நீண்ட கால மன அழுத்தம், உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, கார்டிசால் (Cortisol) போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால், அது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்துகிறது. மேலும், இது உடலில் தேவையற்ற அழற்சியை (Inflammation) உண்டாக்கி, செல்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
நம் உடலில் உருவாகும் அசாதாரணமான அல்லது புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிப்பதே நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வேலை. ஆனால், மன அழுத்தத்தால் பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு மண்டலம், இந்தச் செல்களை அடையாளம் காணத் தவறிவிடுகிறது. இதனால் புற்றுநோய் செல்கள் தடையின்றி பெருகத் தொடங்குகின்றன.

தொடர்ச்சியான மன அழுத்தம், உடலில் எதிர்மறையான உயிரியல் சூழலை உருவாக்குகிறது. இந்தச் சூழல், புற்றுநோய் செல்கள் வளர்வதற்கும், உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதற்கும் மிகவும் சாதகமாக அமைந்துவிடுகிறது.
எந்தப் புற்றுநோயையும் முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான நபர்கள் 45 வயதிலிருந்தும், குடும்பப் பின்னணியில் புற்றுநோய் அபாயம் உள்ளவர்கள், 20 அல்லது 30 வயதிலிருந்தும் பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும் என்று மருத்துவ வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.
உடல் ஆரோக்கியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அக்கறையை, மனநலனுக்கும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைமுறை, வொர்க்-லைஃப் பேலன்ஸைப் பழகுவது போன்றவற்றை இனியாவது சீரியஸாகப் பின்பற்றுங்கள்….”
-மீண்டும் எச்சரித்து முடிக்கிறார் டாக்டர் கிருஷ்ணகுமார்.