வேளச்சேரி பகுதியில் வெள்ள பாதிப்பை தடுக்க பள்ளிக்கரணை ஏரியை தூர் வார பசுமை தீர்ப்பாயம் உத்தரவு | Green Tribunal Ordered to Close the Pallikaranai Lake to Prevent Flood on Velachery Area

1311404.jpg
Spread the love

சென்னை: வேளச்சேரி பகுதியில் பருவமழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கு வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட 6 ஏரிகளில் தூர் வார வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி ஏரியில் விடப்படும் கழிவுநீரால் ஏரி மாசுபட்டு இருப்பதாக கடந்த 2020-ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி அடிப்படையிலும், குமாரதாசன் என்பவர் தொடர்ந்த வழக்கு அடிப்படையிலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்குகள் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர், நீர்வள ஆதாரத்துறை அதிகாரி உள்ளிட்டோரை கொண்ட கூட்டுக்குழுவை அமைத்து ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

பின்னர் கூட்டுக்குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் “வேளச்சேரி ஏரியின் உண்மையான பரப்பளவு 107.48 ஹெக்டேர். அரசு துறைகளுக்கு ஏரி பகுதிகள் ஒதுக்கப்பட்டதால் 22.4 ஹெக்டேராக குறைந்துவிட்டது. ஏரியின் நீர் கொள்திறன் 4-ல் ஒரு பங்காக, குறைந்துவிட்டது. பல்வேறு வடிகால்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் ஏரியில் விடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் சில தினங்களுக்கு முன்பு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்ய கோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளச்சேரி ஏரியை சீரமைப்பது தொடர்பாக தலைமைச் செயலர் தலைமையில் கடந்த செப்.10-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், ஏரியில் 4 இடங்களில் கழிவுநீர் கலப்பதை சென்னை குடிநீர் வாரியம் தடுத்துவிட்டதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

ஏரியை சிஎம்டிஏ சார்பில் ரூ.23.50 கோடியில் ஆழப்படுத்தி சீரமைக்கும் திட்டம் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது உள்ள கொள்திறனான 4.35 மில்லியன் கனஅடி அளவைவிட கூடுதலாக 22 சதவீதம் நீரை ஏரியில் தேக்க முடியும். ஏரியில் 50 சதவீதம் கூடுதலாக நீரை தேக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

வேளச்சேரி ஏரியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும் 955 குடும்பங்களை, வேளச்சேரி பகுதியில் வேறு இடத்தில் மறுகுடியமர்த்தவும், சாத்தியம் இல்லாவிட்டால் பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்வு செய்யவும் தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வேளச்சேரியை சுற்றிலும் வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, மடிப்பாக்கம் ஏரி, கீழ்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி ஆகிய 6 ஏரிகள் உள்ளன. பருவமழை காலங்களில் வேளச்சேரியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க இந்த 6 ஏரிகளிலும் தூர் வாரலாம்.

கிண்டி தேசிய பூங்காவை சுற்றி ஏதேனும் ஏரிகள் இருப்பின் அவற்றையும் ஆழப்படுத்த வேண்டும். அதுதொடர்பாக வனத்துறை, நீர்வளத்துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்.20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *