வேளாண் சந்தைப்படுத்துதல் குறித்த தேசிய கொள்கையை நிராகரிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் வேண்டும்: முதல்வரிடம் விவசாயிகள் மனு | Representatives of agricultural associations petition to the Chief Minister

1353514.jpg
Spread the love

சென்னை: தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பால கிருஷ்ணன், செயலாளர் மேரிலில்லிபாய், செயற்குழு உறுப்பினர்கள் காவிரி டெல்டா பாசனதாரர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொதுச்செயலாளர் சாமி நடராஜன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநில தலைவர் பசுமை வளவன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மாநில தலைவர் வி.அமிர்தலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் அம்பேத்கர் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அப்போது, மத்திய அரசின் வேளாண் சந்தைப்படுத்துதல் குறித்த தேசிய கொள்கை தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வரிடம் வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தல் குறித்த புதிய தேசிய கொள்கை கட்டமைப்பு வரைவு நகலை கடந்த நவ.25-ம் தேதி வெளியிட்டுள்ளது.

இது திரும்பப் பெறப்பட்ட 3 விவசாய சட்டங்களின் மறு வடிவமாக இருக்கிறது. இது விவசாயிகளின் சுதந்திரத்துக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக அமையும். இந்த மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு வரைவு கொள்கையை பரிசீலனை செய்து, இதற்கு எதிராக உங்கள் வலுவான குரலை எழுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி, இந்த கொள்கையை நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

மத்திய அரசின் நிர்பந்தத்தால் பொருத்தப்பட்டுள்ள அனைத்து ஸ்மார்ட் மீட்டர்களையும் அகற்ற வேண்டும். ஆழ்குழாய் கிணறுகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் அனைத்து கிராமப்புற பயனாளிகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண, தங்கள் ஆதரவையும், உதவியையும் கோருகிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *