சென்னை: வேளாண் ஆய்வுகள், தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்றுள்ளது.
இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, வேளாண்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக ஆய்வுகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகளுக்காக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளது. குழுவில் வேளாண்துறை செயலர் அபூர்வா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பயணத்தின் முதல்கட்டமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் பல்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல் மற்றும் தொழில்நுட்ப பங்குகள் தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் காலநிலை மாற்றம், புதிய வகை பயிரினங்கள் அறிமுகம், வேளாண்மை – உழவர் நலத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, மண்வளம் காப்பதற்கான நடவடிக்கை, பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பது, உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறைகளைத் தீவிரப்படுத்துவது, தோட்டக்கலை பயிர்களான பழ வகைப்பயிர்கள் மற்றும் மருத்துவ பயிர்களை கையாளுதல், அனைத்து வகை பயிர்களிலும் அறுவடைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டு முறைகள், உணவு வகைப் பயிர்களில் புதுமையை ஏற்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான பயிற்சியை மேம்படுத்துதல், வேளாண்மைப் பாடங்கள் பயிலும் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துதல் போன்றவை விவாதிக்கப்பட்டன.
இந்த கருத்து பரிமாற்றங்கள், முதல்வர் உத்தரவைப் பெற்று தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.