சிவகங்கை: திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்த விவகாரத்தில், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட திருப்புவனம் பேரூராட்சி மற்றும் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் மனுக்களை சமர்ப்பித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை திருப்புவனம் வைகை ஆற்றில் இந்த மனுக்கள் மிதந்தன. இதையடுத்து, அவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டுச் சென்றனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைக் கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி உத்தரவின்பேரில், கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதில், ஆற்றில் மிதந்தவற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் 6, வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்ற மனுக்கள் 7 என மொத்தம் 13 மனுக்களின் நகல்களே இருந்தன என்றும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட 6 மனுக்களும் தீர்வு காணப்பட்டவை என்றும் தெரியவந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதனிடையே, திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக, வட்டாட்சியர் விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்தனர். அந்த மனுக்களை திருடியது யார், ஆற்றுக்குள் வீசியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், அந்த அலுவலகத்தில் இருந்து வைகை ஆறு வரையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிவிடி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்தில் அலட்சியமான முறையில் பணியாற்றிய 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்தார்.