சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் கைவிடப்பட்டவர்கள் தான் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அழைப்புவிடுத்துள்ளார். மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அண்மையில் வைகோ குற்றஞ்சாட்டியிருந்தார்.
தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில் விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என மல்லை சத்யா பதிலளித்திருந்தார். மேலும் அவர் மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆக.2-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து மல்லை சத்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதேச்சாதிகாரப் போக்கில் துரோகப் பட்டத்தை சுமத்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் நிர்வாகிகளைத் தொடர்ந்து வைகோ வெளியேற்றி வந்தார் என்பதை நாடு உணர்ந்துள்ளது.
32 ஆண்டுகள் பணியாற்றிய கட்சியிலிருந்து என்னை துரோகி என்று சொல்லி களங்கப்படுத்தி அரசியலிலிருந்து துடைத்தெறிய வைகோ முயற்சிப்பதோடு, சகாக்களை கொண்டு அவதூறு பிரச்சாரம் செய்து காயப்படுத்துகிறார். உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாளை சென்னை தீவுத்திடல் அருகில் சிவானந்த சாலையில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துகிறோம்.
கட்சிக்காக உழைத்து களைத்துப் போனவர்கள், வைகோவால் கைவிடப்பட்டவர்கள் வர வேண்டும். தலைவனா தொண்டனா என்று வரும்போது தலைவர் பக்கமே நின்று பழக்கப்பட்ட பொது சமூகத்தின் பொது புத்தி முதல் முறையாக ஒரு தொண்டனின் பக்கம் நின்று இருப்பதை நாடு பார்த்துக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.