“வைகோவுக்கு எதிரியாக மாறுவார் துரை வைகோ!” – மதிமுக விவகாரங்களை உடைக்கும் மல்லை சத்யா நேர்காணல் | Durai Vaiko will become Vaiko s enemy MDMK Mallai Sathya interview

1369694
Spread the love

திமுக-வில் வைகோவை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது அவர் மீது கொலைப்பழி சுமத்தினார் கருணாநிதி. அப்போது அதைச் சொல்லி ஆதங்கப்பட்ட வைகோ, இப்போது மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மீது துரோகி பட்டம் சுமத்தி அவரை நொறுங்கிப்போக வைத்திருக்கிறார். “இதைவிட, தலைவர் வைகோ விஷத்தைக் கொடுத்து குடிக்கச் சொல்லி இருந்தாலும் சந்தோசமாக குடித்திருப்பேனே” என மருகிக் கொண்டிருக்கும் மல்லை சத்யாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

உங்களது அரசியல் பயணம் மதிமுக-வில் தான் தொடங்கியதா?

முதலில் திமுக-வில் இருந்தேன். திமுக மூத்த தலைவரான மதுராந்தகம் ஆறுமுகம் என்னை வைகோவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். வைகோவுடனான முதல் சந்திப்பு அதுதான். அதிலிருந்து 32 ஆண்டுகளாக மதிமுக-வில் பயணிக்கிறேன்.

மதிமுக-வில் இருந்து மூத்த தலைவர்களான கண்ணப்பன், எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் போன்றவர்கள் வெளியேறியபோது, உங்களுக்கு உடன்பாடு இருந்ததா?

தலைவர் வைகோ வேதனைப்படக் கூடாது. அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமே எனக்குள் இருந்தது. ஆனால், இங்கிருந்து சென்றவர்கள், “ஒரு நாள் எங்களுடைய நிலைமையில் நீ நிற்கும் போதுதான், இந்த வேதனையை அனுபவிப்பாய்” என்று சொன்னதை தற்போது அனுபவிக்கிறேன்.

“சாரைப்பாம்பு தீண்டுவது போல் சத்தம் இல்லாமல் தீண்டி, எனக்கு நெருக்கடி கொடுத்தார் வைகோ” என்று நாஞ்சில் சம்பத் வெளியேறியபோது சொல்லி வருத்தப்பட்டார். அவருக்கும் மதிமுக-வில் நெருக்கடி கொடுக்கப்பட்டதா?

பொதுவாக சாரைப்பாம்பு விஷம் இல்லாதது. அது கடித்தால் யாரும் சாக மாட்டார்கள். ஆனால், நாஞ்சில் சம்பத் மதிமுக-வில் இருந்தபோது, பல கட்டங்களில் காயப்பட்டதாகவும், தனக்குப் போட்டியாக பலரை வைகோ உருவாக்குகிறார் என்றும் சொல்லி இருக்கிறார்.

பொடா சிறையில் தள்ளிய ஜெயலலிதாவுடனும், கொலைப்பழி சுமத்திய கருணாநிதியுடனும் கூட்டணி அமைத்து வைகோ மேடையைப் பகிர்ந்து கொண்டதை முழுமனதாக ஏற்றுக் கொண்டீர்களா?

மதிமுக உதயமாகி, 1996 தேர்தலைச் சந்தித்த போது, வைகோ உட்பட 177 மதிமுக வேட்பாளர்களும், தோல்வி அடைந்தனர். அந்த சூழ்நிலையில், இயக்கத்தைப் பாதுகாக்க, 1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேசமயம், 2006 தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைக்கும் போது நான் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன்.

அப்போது, “அதிமுக ஆட்சியை அகற்றும் வரை நான் கருப்புச் சட்டை அணிவேன்” என்று சபதம் ஏற்று இருந்தேன். அந்தக் கருப்புச்சட்டையுடன் தான், வைகோவுடன் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்தேன் என்பது வரலாறு. அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என யாரையெல்லாம் எதிர்த்து அரசியல் செய்தோமோ, அவர்களோடு எல்லாம் கூட்டணி அமைத்ததன் மூலம். மக்கள் மன்றத்தில் நம்பகத்தன்மையை மதிமுக இழந்துவிட்டது.

ஆனால், “கட்சி நிர்வாகிகள் நலனுக்காக, அவர்கள் வற்புறுத்தியதால்தான் கூட்டணிகளை அமைக்க வேண்டி வந்தது” என வைகோ பலமுறை சொல்லி இருக்கிறாரே?

கருப்புச் சட்டையை கழற்ற மாட்டேன், அதிமுக-வுடன் கூட்டணி வேண்டாம் என்று நான் அடித்த எச்சரிக்கை மணியை, வைகோ பொருட்படுத்தவில்லை. ஒருவேளை, இவன் சொல்லி நாம் கேட்பதா என்று வைகோ நினைத்திருக்கலாம்.

துரை வைகோவுக்கு மதிமுக முதன்மைச் செயலாளர் மற்றும் எம்பி வாய்ப்பு போன்றவை, கட்சி நிர்வாகிகள் அனைவரும் உடன்பட்டு கொடுத்ததா அல்லது திணிக்கப்பட்டாரா?

கட்சியின் தலைவர் வைகோ. அவரது மகனுக்கு வாய்ப்பு கொடுப்பதை, யாராவது எதிர்த்தால் அந்த கட்சியில் இருக்க முடியுமா? எனவே, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். மாற்றுக் கருத்து இருந்தாலும், சொல்ல முடியாமல் சிலர் உள்ளே இருக்கிறார்கள்.

கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு நடத்தித்தானே, துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டது?

அந்தக் கூட்டத்தில் இப்படி ஒரு வாக்கெடுப்பு நடக்கும் என்பது அங்கு இருக்கும் யாருக்கும் கடைசி வரை தெரியாது. நிர்வாகிகளுக்கு முன் தகவல் இல்லாமல், ஜனநாயக விரோதமாக அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனால், மொத்தம் இருந்த 106 பேரில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வேறு வழியின்றி வாக்களித்தனர்.

என்னை சந்தேகத்துக்கு உரியவனாக பார்ப்பார்கள் என்பதால், துரை வைகோவுக்கு ஆதரவாக நான் வாக்களித்ததை, தேர்தல் அதிகாரி வந்தியத்தேவனிடம் காட்டிவிட்டு பெட்டியில் போட்டேன். ஏற்கெனவே முடிவெடுத்து வைத்துவிட்டு, ஊரை ஏமாற்ற வாக்கெடுப்பு என்ற நாடகத்தை அந்தக் கூட்டத்தில் அரங்கேற்றினர்.

துரை வைகோவுக்கு உங்கள் மீது அப்படி என்னதான் கோபம்?

ஐந்தாண்டுகளுக்கு முன்பு, அரசியலுக்கு துரை வர வேண்டும் என முதன்முதலாக சொன்னவன் நான். அவருக்காக எனது துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கொடுப்பதாகவும் கூறினேன். ஆனால், அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

“நீ வகிக்கும் பதவிக்கு துரை வரலாமா… நீயும், துரையும் ஒன்றா” என்று வைகோ உங்களிடம் கேட்டாரா?

மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் வைகோ பேசும்போது, “துரை வைகோவுக்காக தனது பதவியை விட்டுத் தருவதாக மல்லை சத்யா கூறியிருக்கிறார். மல்லை சத்யாவும், துரை வைகோவும் ஒன்றா? துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சத்யா விலகினால், அந்த இடத்திற்கு அவரது சமூகத்தைச் சார்ந்த ஒருவர் தான் வர முடியுமே தவிர, என் மகன் வர முடியாது” என்றார்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்ற அடிப்படையில் தான் எனக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது என்ற சாதிய சிந்தனையுடன் வைகோவின் இந்தப் பேச்சு இருந்தது. என்னதான் சமூக நீதி பேசினாலும், அவர்கள் வேறுதான் என்பதை வெளிப்படுத்தியதோடு, என்னை அப்போதே காயப்படுத்தி விட்டனர். அதிலிருந்து நான் துரை குறித்துப் பேசுவதில்லை. இறுக்கமான மனநிலைக்குச் சென்று விட்டேன்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தான் செய்ததை வைகோ சமீபத்தில் பட்டியல் போட்டு இருப்பதன் நோக்கம் என்ன?

இது ஒரு அடையாள அரசியல். பொதுவெளியில் ஒரு கள செயல்பாட்டாளராக அறியப்பட்ட என்னை, பிற சமூகத்தவருக்கு, இவர் பட்டியல் இனத்தவர் என்ற அடையாளத்தை கொடுக்கப் பார்க்கிறார் வைகோ. அவர் சொன்ன அந்தப் பட்டியலில், கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவராக, வைகோ வீட்டில் வேலை பார்த்த சந்துரு என்ற பட்டியலினத்தவரை தலைவராக்கியதாகச் சொல்கிறார். அந்த ஊராட்சி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டதால், அவரை தலைவராக்கினார். அது பொது ஊராட்சியாக இருந்தபோது தலைவர் பதவியைப் பெற்றுத் தரவில்லை.

கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த குடியரசு குடும்பத்தாருக்கு பலரின் உதவியோடு வைகோ வீடு கட்டித் தந்தார். இதை அவர் 100 மேடைகளில் சொல்லிவிட்டார். சுயமரியாதைக்காரரான குடியரசு, தற்போது உயிரோடு இருந்திருந்தால் இதைப் பொறுக்க முடியாமல் வீட்டுச் சாவியையும், வீட்டுப் பத்திரத்தையும் வைகோவிடமே ஒப்படைத்து இருப்பார். அதேபோல், பட்டியலினத்தவருக்கான தொகுதி என்பதால் தான் பொள்ளாச்சி கிருஷ்ணனுக்கு எம்பி வாய்ப்பும், சதர்ன் திருமலைக் குமாருக்கு எம்எல்ஏ வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இதைவிட, மதிமுக-வின் தூணாக விளங்கிய மதுராந்தகம் ஆறுமுகம், 1998 மக்களவைத் தேர்தலில், மதிமுக பெற்ற 5 தொகுதிகளில் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு கூட வாய்ப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே, மதிமுக-வில் இருந்து வெளியேறினார் என்பது வரலாறு.

வைகோவைப் போல் உங்களுக்கும் களத்தில் துணையாக இருப்பேன் என்று நீங்கள் சொன்னதை துரை வைகோ நம்பவில்லையோ?

துரை அவரது நிழலைக் கூட நம்பமாட்டார். அவருக்கு ஆலோசனை சொல்வது பிடிக்காது. தன்னைவிட சிறந்த அறிவாளி யாரும் இல்லை என்று நினைக்கிற மனப்பான்மை கொண்டவர் என்று அவரது நண்பர்களும், உறவினர்களும் ஏற்கெனவே என்னிடம் தெரிவித்துள்ளனர். தன் நிழலைக்கூட நம்பாதவர் என்னை எப்படி நம்புவார்?

உங்களையும் துரை வைகோவையும் கைகுலுக்க வைத்து வைகோ சமரசம் செய்து வைத்தாரே..?

வைகோ சமரச நிகழ்வுக்குப் பிறகு, ‘நான் வருத்தப்பட்டேன், மன்னிப்பு கேட்டேன்’ என, என் ஒப்புதல் இல்லாமல் என் பெயரில் ஓர் அறிக்கை வெளியானது. சமரச உடன்படிக்கைக்குப் பின்னாலும், என்னை அவமானப்படுத்துவதற்காகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அந்தக் கூட்டத்தில், “என் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள்” என்று தான் நான் சொன்னேன். அதை விடுத்து சமரசம் செய்து வைத்தபின், நான் மன்னிப்புக் கேட்டதாக செய்தி வரவைப்பது என்ன நியாயம்?

பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல் நீங்கள் துரோகம் செய்ததாக வைகோ கூறியது உங்களை பெரிதும் காயப்படுத்திவிட்டதோ?

எனது 32 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தனது மகனின் அரசியல் நலனுக்காக, என் மீது இந்த கொடூரமான, துரோகப் பழியை வைகோ சுமத்தி இருக்கிறார். நான் அவரது சேனாதிபதியா அல்லது துரோகியா என்பதை மதிமுக-வினரும், நாட்டு மக்களும் முடிவெடுப்பார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதா?

வாய்ப்பு அளிக்கப்படவில்லை. துரை வைகோவின் வருகைக்கு பிறகு, அவர் சொல்லும் நபர்கள் மட்டுமே வைகோவைச் சந்திக்க முடியும். அவர் அனுமதித்தால் மட்டுமே, வைகோவுடன் போனில் பேச முடியும். கடந்த மே மாதம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஜூலியஸ் சீசர் – புரூட்டஸ், ஏசு கிறிஸ்து – யூதாஸ், வீரபாண்டிய கட்டபொம்மன் – எட்டப்பன் என பல உதாரணங்களைச் சொல்லி என்னை துரோகியாக சித்தரிக்க துரை வைகோ முயன்றார்.

துரை வைகோ அரசியல் பாலபாடம் கூட படித்ததில்லை. அரசியலில் அவர் ஒரு எல்கேஜி. அவர் குறிப்பிட்ட உதாரணங்கள் அனைத்தும், ஒரே ரத்தத்தில் வந்தவர்கள் என்பதை உணரவில்லை. ஒரே ரத்தத்தில் வருகின்ற விரோதம் தான் துரோகமாக மாற முடியும். எனவே, மதிமுக-வை கட்டி எழுப்பிய வைகோவுக்கு, ஒரே ரத்தத்தைச் சேர்ந்த நீங்கள் தான் துரோகியாக இருப்பீர்கள். நாங்கள் காட்டிக்கொடுக்கும் கூட்டமல்ல. களத்தில் படைத்தளபதியாக நின்று மாண்டு போகிறவர்கள். எனவே, மதிமுக-வுக்கும், தலைவர் வைகோவுக்கும், துரை வைகோ தான் எதிரியாக வருவார்.

(பேட்டி தொடரும்…)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *