வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றதன் நூற்றாண்டு நிறைவையொட்டி, வைக்கத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.8.50 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கேரள மாநிலம் வைக்கத்தில் கடந்த 1924-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் பெரியார் பங்கேற்றதன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ரூ.8.50 கோடியில் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவகம், நூலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலையில், நினைவகம், நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், இந்த ஆண்டுக்கான வைக்கம் விருதை, கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தேவநூர மகாதேவாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தலைமை உரை நிகழ்த்திய பினராயி விஜயன், வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டினார்.
விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இது. எந்த வைக்கம் நகருக்குள் நுழைய கூடாது என்று தந்தை பெரியார் தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டாரோ, அதே நகரில் நினைவகம் எழுப்பியுள்ளோம். பெரியார் நினைவகம், நூலகம் கட்டுவதற்கான அனுமதி உள்ளிட்ட அனைத்து முன்னெடுப்புகளுக்கும் உறுதுணையாக இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேரளா வரும் அனைவரும் கட்டாயம் இந்த நினைவகத்தை பார்வையிட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள், அடிமை விலங்கை உடைத்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 1924 மார்ச் 30-ம் தேதி தொடங்கிய வைக்கம் போராட்டம், மகாதேவர் கோயில் தெருவில் அனைத்து சமூகத்தினரும் நடந்து செல்ல வழிவகுத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கேரள தலைவர்கள் அனைவரும் வரிசையாக கைதான நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியாரை அழைத்தனர். ஏப்ரல் 13-ம் தேதி கேரளா வந்த அவர், ஒருநாள் அடையாள போராட்டம் நடத்திவிட்டு திரும்பி போகவில்லை. 5 மாதம் இங்கேயே தங்கி போராட்டம் நடத்தினார். இருமுறை சிறை சென்றார். இறுதிவரை போராடினார். வீரம் மிகுந்த இந்த போரில் மறக்க முடியாத 2 பெண்கள், பெரியாரின் மனைவி நாகம்மாளும், பெரியாரின் தங்கை கண்ணம்மாளும். வைக்கம் போராட்டத்தில் வெற்றி கண்ட பெரியாரை ‘வைக்கம் வீரர்’ என்று திரு.வி.க. போற்றினார்.
‘வைக்கம் போராட்டம்’ என்பது கேரளாவுக்கான போராட்டம் மட்டுமல்ல. இந்தியாவில் தொடங்கிய பல்வேறு சமூகநீதி போராட்டங்களுக்கான தொடக்க புள்ளி. அமராவதி கோயில், பார்வதி கோயில், நாசிக்கில் உள்ள காலாராம் கோயில் நுழைவு போன்றவற்றுக்கு அம்பேத்கரின் முயற்சி காரணம் என்றால், தமிழகத்தில் சுசீந்திரம், மதுரை மீனாட்சி அம்மன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், திருச்சி மலைக்கோட்டை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாடுதுறை கோயில், ஈரோடு ஈஸ்வரன் கோயில் நுழைவுக்கு பெரியாரும், சுயமரியாதை இயக்கமும்தான் காரணம். இந்த நிலையில்தான், கடந்த 1939-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, ‘கோயிலுக்குள் வரும் அனைவரையும் அரசு பாதுகாக்கும்’ என்று உத்தரவாதம் பெறப்பட்டது.
வைக்கம் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்றவர்கள் பட்டியல் மிக நீளமானது. இங்கிருந்து இதற்காக நிதி கொடுத்தவர்கள் அதிகம். சமூக சீர்திருத்த போராட்டங்களில் இதுபோன்ற ஒருங்கிணைப்புகள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதற்கு வைக்கம் போராட்டமே எடுத்துக்காட்டு.
100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, இப்போது சமூக ரீதியாகவும், அரசியல் வழியிலும், பொருளாதார சூழலிலும் முன்னேறி உள்ளோம். ஆனால், இது போதாது. இன்னும் நாம் முன்னேறிப் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, ஏழை, பணக்காரன், ஆண், பெண் பாகுபாடுகளுக்கு எதிராக நாம் போராட்டத்தை தொடர வேண்டும். முன்பு இருந்ததைவிட வேகமாக செயல்பட வேண்டும்.
நவீன வளர்ச்சியால் இந்த பாகுபாடுகளை முழுமையாக நீக்க முடியவில்லை. தவிர, அனைத்தையும் சட்டம் போட்டு மட்டுமே தடுக்க முடியாது. மனதளவில் மக்கள் மாற வேண்டியது அவசியம். யாரையும் தாழ்த்திப் பார்க்காத சமத்துவ எண்ணம், பகுத்தறிவு சிந்தனைகள், அறிவியல் கண்ணோட்டத்தோடு எதையும் அணுகும் பார்வை ஆகியவை வளர வேண்டும். அதற்காகத்தான் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதை அரசியல் கொள்கையாக மட்டுமின்றி, ஆட்சியின் கொள்கையாகவே தமிழகத்தில் அறிவித்துள்ளோம். தமிழகம்போலவே கேரளாவிலும் புரட்சிகரமான பல முற்போக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வைக்கம் என்பது தனிப்பட்ட வெற்றி அல்ல. தொடர் வெற்றிகளுக்கான தொடக்கம். அந்த தொடர் வெற்றியை எல்லா துறையிலும் அடைய உறுதியோடு உழைப்போம். ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயம் அமைத்தே தீருவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ரகுபதி, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கோவி.செழியன், கயல்விழி செல்வராஜ், கேரள அமைச்சர்கள், வி.என்.வாசவன், சஜி செரியன், தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம், கேரள தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், விசிக தலைவர் திருமாவளவன், கோட்டயம் ஆட்சியர் ஜான் சாமுவேல், கோட்டயம் எம்.பி. பிரான்சிஸ் ஜார்ஜ், வைக்கம் எம்எல்ஏ சி.கே.ஆஷா, வைக்கம் நகரமன்ற தலைவர் பிரிதா ராஜேஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.