நம் உடல் “ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ (Oxidative Stress) நிலையில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு குறையும்போது ஏற்படும் சமநிலையற்ற நிலை.
இந்த ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை சமன் செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ உபயோகப்படுத்துவதுதான் வைட்டமின் சி. அதனால்தான், காயம் ஆறும் காலத்தில் உள்ளவர்களுக்கோ (Healing Time), புகை பிடிப்பவர்களுக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை முடித்தவர்களுக்கு, அதேபோல நீரிழிவு நோயாளிகளுக்குப் புண்கள் ஏதாவது வந்தாலோ வைட்டமின் சி சப்ளிமென்ட்டை (Supplement) மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறோம்.
இதன் நோக்கம், அவர்களுடைய ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து, அவர்களுடைய நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.

நாம் ஒருநாளைக்கு 2,000 மில்லிகிராமுக்கு மேல் வைட்டமின் சி எடுத்தால், அதுவே நமக்கு பிரச்னைகளை உண்டாக்கும். ஒரு நாளைக்கு ஒருவர்2,000 மில்லிகிராமுக்குள்தான் வைட்டமின் சி எடுக்க வேண்டும். அதற்கும் மேல் போனால், அந்த வைட்டமின் சி-யே அவர்களுக்குப் பிரச்னைகளை உண்டுபண்ணும்.
அதனால்தான் வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுகளைப் (முக்கியமாக சிட்ரஸ் பழங்கள், காய்கறிகள், கீரை, புரோக்கோலி) பரிந்துரைக்கிறோம். அது அவர்களுக்கு வைட்டமின் சியின் பலனை அளிக்கும்.
வைட்டமின் சி மட்டுமல்ல, எந்த சப்ளிமென்ட்டையும் மருத்துவரின் பரிந்துரையின்றி, எடுக்காமல் இருப்பதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.