வைரலான லஞ்ச வீடியோ: சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பகிரங்க எச்சரிக்கை | Additional commissioner of police R Sudhakar warns fellow policemen

1284507.jpg
Spread the love

சென்னை: “பணத்துக்காக பணியாற்ற நினைக்கும் போக்குவரத்துக் காவலர்கள் தயவுசெய்து வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டு சென்று விடுங்கள்” என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் வாக்கிடாக்கியில் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வேப்பேரி போக்குவரத்து காவல்துறையினர் மஞ்சள் பை மூலமாக லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்லும் பொழுது அவர்களிடம் அபராதம் விதிக்காமல் அருகில் நிறுத்தி வைத்துள்ள இருசக்கர வாகனத்தில் தொங்க விடப்பட்ட மஞ்ச பையில் லஞ்ச பணத்தை போட்டு விட்டுச் செல்லுமாறு போக்குவரத்து போலீஸார் தெரிவிக்கின்றனர். அதன் பேரில் வாகன ஓட்டிகள் லஞ்ச பணத்தை மஞ்சள் பையில் போட்டுவிட்டு போவது போன்று பதிவாகியுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் சென்னையில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் வாக்கி டாக்கியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, வாகனச் சோதனையின் போது போலீஸார் பணம் வாங்கிக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸார் மீது புகார்கள் வந்தால் அவர்களை பணியிடை நீக்கம் அல்லது பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், “போக்குவரத்து பிரிவில் பணத்துக்காக பணியாற்ற நினைக்கும் காவலர்கள் தயவு செய்து வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டு சென்றுவிடுங்கள்” எனவும் வாக்கி டாக்கியில் பகிரங்கமாக கூடுதல் ஆணையர் சுதாகர் அறிவித்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

அதுமட்டுமின்றி நீங்கள் ஒருவர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த போக்குவரத்து துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது, ஒரு சில செய்திகளை பார்க்கும் பொழுது மிகவும் அசிங்கமாக உள்ளது என்றும் இது போன்ற தவறுகள் நடக்கும் பட்சத்தில் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது அனைத்து போக்குவரத்து காவல்துறையினருக்கும் பொருந்தும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, வேப்பேரியில் வாகன ஓட்டிகளிடம் மஞ்சப் பையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *