மதுரை: “ஷரியத் கவுன்சில் ஒரு தனிப்பட்ட அமைப்புதான். நீதிமன்றம் கிடையாது. அரசின் அங்கீகாரம் பெற்ற நீதிமன்றம் மட்டுமே தீர்ப்புகளை வழங்க முடியும். மற்ற அமைப்புக்கு அந்த அதிகாரம் கிடையாது” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரபி அகமது, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: எனக்கும் எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் 2010-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நாங்கள் இருவரும் டாக்டர்களாக பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில் என் மனைவி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் என் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நீதிமன்றம், நான் என் முதல் மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், குழந்தை பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.25 ஆயிரமும் வழங்கும்படி கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு மனுதாரர் முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஒரு இந்து அல்லது கிறிஸ்தவர், பார்சி, யூத மதத்தை சேர்ந்த கணவன், முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டால் அது குற்றமாக அமைவதுடன், கொடுமையானதும்தான்.
இந்த நடைமுறை முஸ்லிம்களுக்கு பொருந்துமா? என்றால் ‘ஆம்’ என்பதுதான் பதில். ஒரு முஸ்லிம் ஆண், 4 திருமணம் வரை செய்துகொள்ள சட்டப்பூர்வ உரிமை உண்டு. ஆனால், கணவரின் இரண்டாவது மனைவியை குடும்பத்தில் ஒருவராக சேர்ப்பதை மறுக்கும் உரிமை முதல் மனைவிக்கு உள்ளது.
மனுதாரர் தனது முதல் மனைவியிடம் இருந்து அதிகாரபூர்வமாக பிரிந்ததற்கான சான்றிதழை ஷரியத் கவுன்சில் வழங்கியதாக கூறுகிறார். இது தொடர்பான விசாரணையில் மனுதாரரின் தந்தை சாட்சியாக இருந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
தமிழில், “வேலிக்கு ஓணான் சாட்சி, வெந்ததுக்கு சொக்கன் சாட்சி” என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, பச்சோந்தி வேலியின் சாட்சி, சமையல்காரன் சாப்பாடு ருசியாக கொதித்தது என்று சாட்சி சொல்வானாம். அதை போல இருக்கிறது மனுதாரருக்கு அவரது தந்தையே சாட்சி கூறியது.
அரசின் அங்கீகாரம் பெற்ற நீதிமன்றம் மட்டுமே தீர்ப்புகளை வழங்க முடியும். மற்ற அமைப்புக்கு அந்த அதிகாரம் கிடையாது. ஷரியத் கவுன்சில் ஒரு தனிப்பட்ட அமைப்புதான். நீதிமன்றம் கிடையாது. எனவே மனுதாரர் தனது மனைவி உடனான திருமண பந்தத்தை முறிக்க அதிகாரப்பூர்வமான நீதிமன்றத்தில் உத்தரவை பெற தவறிவிட்டார்.எனவே இவர்களின் திருமண பந்தம் தொடர்கிறது. ரூ.5 லட்சம் இழப்பீட்டை கீழ் நீதிமன்றம் விதித்தது நியாயமானது. இந்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.