ஸ்காட்லாந்தைப் போல காஷ்மீரிலும் வாக்கெடுப்பு தேவையா?

Spread the love

பட மூலாதாரம், BBC World Service

ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு போல இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனையாக இருக்கக்கூடிய காஷ்மீர் மாநிலத்திலும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் இந்தியாவில் எழுந்துள்ளன.

ஸ்காட்லாந்துக்கும் அதன் மக்களுக்கும் ஜனநாயக முறையில் வாக்களிக்க பிரிட்டன் அனுமதி வழங்கியது போல, இந்தியாவும் காஷ்மீர் பிரச்சனையில் ஜனநாயக ரீதியில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்தின் நடவடிக்கை வரவேற்கத் தக்கது என்றும், மக்களுக்கு ஜனநாயக உரிமை அளிப்பது தொடர்பில் இந்தியா ஐக்கிய இராச்சியத்திடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி தெரிவித்துள்ளார்.

ஆனால், காஷ்மீரில் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள், தங்களின் சொந்த நலன்களுக்காகவே குரல் கொடுப்பதாகவும் தங்களின் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப மக்களின் உணர்வுகளை தவறாக திசை திருப்ப முயல்வதாகவும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஃபயஸ் அகமது பட் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மக்களுக்கு இப்படியான வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லை என்றும், பெரும்பான்மையானவர்கள் தேசியவாதிகள் தான் என்றும் காஷ்மீர் மாநிலத்தின் பாஜக தலைவர் ஃபயஸ் அகமது பட் கூறினார்.

காஷ்மீரின் நிலைமையும் ஸ்காட்லாந்தின் நிலைமையும் முற்றிலும் வேறுபட்டவை என்றும், காஷ்மீர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே 1947- இல் இந்தியாவுடன் இணைந்ததாகவும் பாரதிய ஜனதாக் கட்சியின் வெளிவிவகாரத் துறைத் தலைவர் சேஷாத்ரி சாரி தெரிவித்துள்ளார்.

‘எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை பெறும் அரசியல் அமைப்பு திருத்தம் வேண்டும்’ என்று நாடு சுதந்திரம் அடைந்த புதிதில் கோரிய தமிழகக் கட்சியான, திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது காஷ்மீர் பிரச்சனையில் வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு ஏற்கனவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370-இன் கீழ் தனி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது என்றும் பொது மக்கள் வாக்கெடுப்புக்கு அவசியம் இல்லை என்றும் திமுக தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஜனநாயகக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ள காஷ்மீரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும் இந்தியாவுடன் ஒன்றி இருக்கும் முடிவையே ஏற்றுக்கொண்டு இயங்கி வருகிறது என்றும் அங்கு பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தேவையில்லை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ராஜா தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *