“ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா?" – ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசும் ஆர்.எஸ் பாரதி

Spread the love

இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என் ரவி உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இதற்கு தி.மு.க-வினர் கடுப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “சட்டமன்றத்தில் இருந்து 3-ஆவது ஆண்டாக உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ரவி. மோதல் போக்கு காரணமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரைச் சட்டப்பேரவைக்கு அழைக்காத நிகழ்வுகள் நடைபெற்றன.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

பொய்களின் தோரணம்

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறியது குறித்து மக்கள் பவன் வெளியிட்டிருக்கும் அறிக்கை பொய்களின் தோரணம். ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தொடர்ச்சியான அவருடைய சட்டமன்ற உரைகளைப் பார்த்தாலே அரசியல் செய்யத்தான் வந்திருக்கிறார் என்பது புரியும்.

ஆளுநர் ரவி 2022-ஆம் ஆண்டு ஆளுநர் ரவி எந்தச் சண்டித்தனமும் செய்யவில்லை. அதன்பிறகுதான் தன்னுடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார்.

2023-ஆம் ஆண்டு உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்கவில்லை.

மக்கள் அறிவார்கள்!

2024-ஆம் ஆண்டு உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது. தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனப் புதுக்கதை எழுதினார் ஆளுநர் ரவி. உரையை வாசிக்காமல் அமர்ந்தார். 2025-ஆம் ஆண்டு முந்தைய ஆண்டில் கூறிய அதே காரணத்தை மீண்டும். எழுப்பி, அவையிலிருந்து உரையை வாசிக்காமல் போனார். இப்போதும் அதே பல்லவிதான். அதற்கு காரணம் என்ன? என்பதை மக்கள் அறிவார்கள்.

பிரதமர் மோடி பங்கேற்ற மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற போது தேசிய கீதம் பாடப்படவில்லை. அப்போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை?

பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாகச் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார். ஆளுநர் அவர்களே.. அரசியல் செய்வதாக இருந்தால் மக்கள் பவனுக்குள் இருந்து செய்யாமல், கமலாலயத்திற்குச் சென்று செய்யுங்கள். ராஜ்பவன் பெயரை மக்கள் பவன் என மாற்றினால் மட்டும் போதுமா? பெரும்பான்மை மக்களின் குரலை எதிரொலிக்க வேண்டாமா?

’அரசியலமைப்பு கடமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது’ என்கிறது ஆளுநர் மாளிகை. மாநில அரசின் உரையைத்தான் ஆளுநர்கள் படிக்க வேண்டும் என்பதும் அரசியலமைப்பு கடமைதான். அதனை அலட்சியம் செய்துவிட்டு, அரசியலமைப்பு பற்றியெல்லாம் பாடம் எடுக்க ஆளுநருக்கு அருகதை இல்லை.

ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியிடுகிறது என்றால், ஒன்றியத்தில் இருந்து ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா?

வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ வரிசையில் ஆளுநர் பதவியையும் பயன்படுத்தி பாஜக அல்லாத மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அபத்தங்களும், அவதூறுகளும், அரைகுறைத்தனமும் கொண்ட ஆளுநர் ரவியின் அறிக்கை அவருக்குத் தமிழ்நாட்டின் மீது இருக்கும் வெறுப்பு முற்றிப் போய்விட்டிருப்பதையே காட்டுகிறது.

ஸ்டாலின் - ஆளுநர் ரவி
ஸ்டாலின் – ஆளுநர் ரவி

உச்சநீதிமன்றத்தால் பல்வேறு நேரங்களில் அரசியலமைப்புக்கு விரோதமாகச் செயல்படுகிறார் எனக் குட்டு வாங்கிய பெருமைக்குரியவர் இந்தியாவிலேயே ஆளுநர் ரவி மட்டும்தான்.

இந்தியா முழுவதும் பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்றத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் ஆளுநர்களின் கொட்டத்தை அடக்கும் வகையில் ஆளுநர் உரை எனும் நடைமுறையை நீக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சூளுரைத்துள்ளார்; இனி இந்தக் குரல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒலிக்கும், ஆளுநர்களின் அத்துமீறலை ஒழிக்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *