முதல்வர் மு.க.ஸ்டாலின், பழனிசாமி, சீமான், விஜய் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களின் வீட்டு பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: கடந்த 2019-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான புதிய கல்விக் கொள்கைக் குழு சமர்பித்த அறிக்கையில், இந்தியாவில் அனைவரும் மூன்று மொழிகளை கட்டாயம் கற்க வேண்டும். அதில், தாய்மொழி முதன்மையானதாகவும் 2-வது மொழி ஆங்கிலம், 3-வது மொழி இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. 1968 முதல் 1986 வரையிலான கல்விக் கொள்கையில் இதே பிரச்சினை நிலவுகிறது எனக் கூறி, அந்த குழு கொடுத்த அறிக்கையை ஏற்க மறுத்த பிரதமர் மோடி அந்த அறிக்கையில் மாற்றம் செய்தார்.
அதன்படி, மூன்று மொழிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதில், கட்டாய இந்தி மொழி இருக்க கூடாது, ஏதேனும் ஒரு இந்திய மொழியை விருப்ப மொழியாக தேர்வு செய்து கற்கலாம் என மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கிறார்கள் என்ற அதே பழைய பஞ்சாங்கத்தை தூக்கிக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். தமிழகத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில், குறைந்தபட்சம் 30 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டங்களில் படிப்பதால், அவர்கள் மூன்று மொழிகளை கற்கிறார்கள்.
தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸின் மகன் கூட தமிழ்மொழிக்கு பதிலாக பிரெஞ்சு மொழியை படிக்கிறார். இதில் தவறு கிடையாது. ஆனால், அரசு பள்ளியில் படிக்கும் 52 லட்சம் மாணவர்கள், இரு மொழிகளை மட்டுமே படிக்கிறார்கள். திமுகவினரின் குழந்தைகள் மட்டும் 3 மொழிகளை படித்துவிட்டு வெளிநாடு செல்ல வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் இரு மொழிகளை படித்துவிட்டு, திமுகவினருக்கு போஸ்டர் ஒட்ட வேண்டுமா?
சமீபத்தில் வெளியான தமிழகத்தின் கல்வி செயல்பாடு தொடர்பான ஆய்வறிக்கையிலேயே, தமிழகத்தின் இரு மொழி கொள்கை தோல்வி அடைந்துவிட்டது என்பது தெரிகிறது. இதுதான் திமுகவினர் தமிழை வளர்க்கும் லட்சனமா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் கூட பல மொழிகளை கற்று வருகின்றன. சீமானின் 2016 தேர்தல் அறிக்கையில், மூன்றாவது மொழியாக இந்தி உட்பட உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளும் விருப்ப பாட மொழியாக கற்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதற்கும், புதிய கல்வி கொள்கைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, சீமான், விஜய் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும், முதலில் உங்கள் வீட்டு பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள். முதல்வரின் பேரன் எங்கே படிக்கிறார். அனைவரும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
எங்கள், கண் முன்னே இளைய சமுதாயம் அழிவதை ஏற்க முடியாது. தமிழக அரசு பள்ளி மாணவர்களை கூலி, கொத்தடிமை வேலைதான் பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அண்ணாமலையும் பாஜகவும் உங்களை எதிர்த்து நிற்போம். 2026-ல் தமிழத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.