“தமிழக வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இதுபோன்ற கொடுமை நடைபெற்றதில்லை. குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இருந்ததை ரத்து செய்து விட்டு தூத்துக்குடி செல்கிறேன்.”
– கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டவுடன் இப்போதைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் கொந்தளித்து பேசிய வார்த்தைகள் தான் இவை.
கொந்தளித்ததுடன் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து உடனே விளக்கமெல்லாம் கேட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த சம்பவத்துக்கு காரணமான ஒரு அதிகாரியை விடமாட்டோம் எனச் சூளுரைக்கவும் செய்தார்.
நிற்க. ஒரு வருடத்துக்கு முந்தைய ஒரு செய்திக்கு வருவோம்.
துப்பாக்கிச்சூடு நடந்த போது ஐ.ஜி யாக இருந்த சைலேஷ் குமார் யாதவுக்கு 2023 இறுதியில் டி.ஜி.பி யாக பதவி உயர்வு அளித்தது தமிழக அரசு. திமுக கூட்டணியிலிருக்கும் கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் கண்டனமெல்லாம் கூட தெரிவித்தனர்.

இப்போது கடந்த வார மேட்டருக்கு வருவோம்.
அந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷனான அருணா ஜெகதீசன் கமிஷன் சம்பவத்தில் குற்றம் நிகழ்த்தியதாகச் சுட்டிக் காட்டிய காவல் துறை அதிகாரிகளில் ஒருவரான ரென்னிஸுக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். இப்போது ரென்னிஸ் இன்ஸ்பெக்டர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காந்திமதி நாதனிடம் இது தொடர்பாகப் பேசினோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் இவரும் ஒருவர்.