ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று(ஜன. 24) நடைபெற்றது.
மின்வாரியத்தின் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள் பங்கேற்று தங்களது மின்வட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர்..
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது,
கோடைக்காலத்தில் தடையற்ற மின் விநியோகம் வழங்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 6,534 புதிய மின்மாற்றிகளை மாற்ற திட்டமிடப்பட்டு, அவற்றில் 5,407 மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன.
புதிய மின் இணைப்புகளை காலதாமதமின்றி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோடைக்காலத்தில் 22 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு உச்சபட்ச மின் தேவை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.