ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்ஐஆர் படிவம் விநியோகிக்கும் பணியில் திமுக ஐடி விங் நிர்வாகி – பாஜகவினர் எதிர்ப்பால் நடவடிக்கை | DMK IT wing woman distributing SIR form

Spread the love

ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்ஐஆர் படிவத்தை விநியோகிக்கும் பணியில் திமுக ஐடி விங் பெண் நிர்வாகி ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய கிராம நிர்வாக அலுவலரை, அதற்கான பணியில் இருந்து விடுவித்து ஆட்சியர் விடுவித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக(எஸ்ஐஆர்), திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முடிகண்டம் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் முத்தமிழ்ச்செல்வி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் வீடு வீடாகச் சென்று படிவங்களை கொடுக்க வேண்டிய நிலையில், அதற்குப் பதிலாக பொதுமக்களை ஒரே இடத்துக்கு வரவழைத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், நேற்று அவருக்குப் பதிலாக திமுக ஐ.டி. விங் நிர்வாகியும், வாக்குச்சாவடி முகவருமான (பிஎல்-2) பெண் ஒருவரை, படிவம் விநியோகிக்க அமர வைத்துவிட்டுச் சென்றதாக தெரிகிறது. இதைப் பார்த்த பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர், அரசு அலுவலருக்கு பதிலாக திமுக நிர்வாகிகள் எப்படி படிவத்தை பூர்த்தி செய்யலாம் என்று கேட்டு, அந்தப் பெண்ணிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

புகாரின் பேரில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியில் இருந்து கிராம நிர்வாக அலுவலர் முத்தமிழ்செல்வியை விடுவித்தும், புதிய வாக்குச்சாவடி நிலை அலுவலராக கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் விக்னேஷை நியமித்தும் ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *