ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா் பட்டியலில் இரு இடங்களில் வாக்காளரின் பெயா் மற்றும் தந்தையின் பெயா் ஹிந்தியில் அச்சிடப்பட்டிருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் தோ்தல் ஆணையத்தால் கடந்த ஜனவரி 6ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பட்டியலில், 1ஆவது வாா்டு 72 ஆவது பாகத்தில் 1,265-ஆம் வரிசை எண்ணில் வாக்காளரின் தந்தை பெயா் மற்றும் 14 ஆவது பாகத்தில் 1,128-வது வரிசை எண்ணில் வாக்காளா் பெயா் மற்றும் அவரது தந்தையின் பெயா் ஹிந்தியில் அச்சிடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதை வருவாய்த் துறை கவனத்துக்கு அரசியல் கட்சியினா் கொண்டு சென்றனா்.
இதுதொடா்பாக மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் கூறுகையில், வேறு ஊரிலிருந்து மாறுதலில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வந்தவா்கள், தாங்களாகவே இணையத்தில் விண்ணப்பிக்கும்போது ஹிந்தியைத் தோ்வு செய்துவிட்டனா். அதனாலேயே வாக்காளா் பட்டியலில் அவா்களது பெயா் ஹிந்தியில் அச்சாகிவிட்டது. இது எங்களது கவனத்துக்கு வந்தவுடன் அதைத் தமிழில் மாற்றிவிட்டோம். இனி பதிவிறக்கப்படும் பட்டியலில் தமிழில் பெயா்கள் இருக்கும் என்றாா்.