விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு பாறையில் புதிய கற்காலக் கைக்கோடரிகளை வழுவழுப்பாக்கும்போது உருவான தேய்ப்புப் பள்ளங்களை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, நூர்சாகிபுரம் சு. சிவகுமார் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

செண்பகத்தோப்பு வனத்துறைச் சோதனைச் சாவடி அருகில் உள்ள பாறையில், புதிய கற்காலக் கைக்கோடரிகளைத் தேய்த்து வழுவழுப்பாக்கும்போது உருவான 4 தேய்ப்புப் பள்ளங்கள் உள்ளன. இதில் 3 பள்ளங்கள் நேராகவும், ஒன்று அதன் மேற்பகுதியில் குறுக்காகவும் அமைந்துள்ளது.
நேராக உள்ள பள்ளங்கள் கற்கருவிகளை வழுவழுப்பாகத் தேய்க்கப் பயன்பட்டிருக்கலாம். குறுக்காக உள்ள சிறிய பள்ளம் அக்கருவிகளை கூர்மையாக்கப் பயன்பட்டிருக்கலாம்.
இந்தப் பள்ளங்கள் ஆயிரக்கணக்கான முறை கற்கருவிகளைத் தேய்த்ததனால் பாறையில் ஆழமாக பள்ளங்கள் உருவாகியிருக்கின்றன.