விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதப் பிறப்பு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றதை முன்னிட்டு, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா மற்றும் மார்கழி மாத விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீஆண்டாள் மானிடப் பெண்ணாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். ஸ்ரீரங்கநாதருக்குப் பூமாலை சூட்டிய பின், திருப்பாவை பாடி அரங்கனை அடைந்தார். அரங்கனை அடைய 30 நாட்கள் மார்கழி மாதம் நோன்பிருந்து திருப்பாவை பாடிய ஆண்டாள் நோன்பு நோற்ற காலமான இந்த மார்கழி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு மார்கழி மாத முதல் நாள் பிறப்பையொட்டி ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக தங்கக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 30 திருப்பாவைகளும் பொறிக்கப்பட்ட தங்க இழைகளால் நெய்யப்பட்ட புடவை ஸ்ரீஆண்டாளுக்குச் சாற்றப்பட்டது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஸ்ரீஆண்டாள் நோன்பு நோற்ற இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி ஸ்ரீஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.