விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (48) என்பவர் பிள்ளையார்குளம் ஊராட்சியில் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை (நான்கு ஆண்டுகளில்) 1 கோடி 10 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தங்கபாண்டியனுக்குச் சொந்தமான படிக்காசுவைத்தான்பட்டியில் உள்ள சொந்த வீடு, பண்ணைத் தோட்டம், திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது தங்கபாண்டியன் இல்லாத நிலையில், அவரது மனைவி காசியம்மாளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், நகை பில்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஊழல் புகார் காரணமாக ஏற்கனவே தங்கபாண்டியன் தற்காலிகப் பணியிடை நீக்கத்தில் இருந்தார்.