ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட வாய்ப்புள்ளதாக அவரது நெருங்கிய உறவினர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று ஏற்கெனவே வினேஷ் போகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், வருகின்ற ஹரியாணா தேர்தலில் போட்டியிட வினேஷ் போகத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் சில அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி, ஒலிம்பிக் அமைப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இருப்பினும், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என்று ஹரியாணா அரசு அறிவித்திருந்தது.
பாரீஸில் இருந்து சனிக்கிழமை தில்லி திரும்பிய வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் ஹரியாணாவின் மூத்த தலைவருமான தீபேந்தர் ஹூடா விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
இந்த நிலையில், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத்தின் எதிர்கால திட்டம் குறித்து அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
“வருகின்ற ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பபிதா குமாரி போகத்துக்கு எதிராக வினேஷ் போகத்தும், யோகேஸ்வர் தத்துக்கு எதிராக பஜ்ரங் புனியாவும் களமிறங்க வாய்ப்புள்ளது. சில அரசியல் கட்சிகள் அவரை சமாதானப்படுத்த முயற்சித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
வினேஷ் போகத்தின் நெருங்கிய உறவினரும் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா குமாரி போகத், கடந்த 2019ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் பபிதா குமாரி போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், அவருக்கு எதிராக வினேஷ் போகத் களமிறங்குவார் என்று அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.
மேலும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் பஜ்ரங் புனியாவும், வினேஷ் போகத்தும் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிடும் பட்சத்தில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது.