மகாராஜன் – லோகிராஜன் சகோதரர்கள் என்றால் ஆண்டிபட்டி அரசியலில் மிகப் பிரபலம். இவர்களில் அண்ணனான மகாராஜன் திமுகவிலும் தம்பியான லோகிராஜன் அதிமுகவிலும் இருக்கிறார்கள். இரண்டு கட்சிகளுமே கடந்த இரண்டு தேர்தல்களாக இவர்களுக்கு சீட் கொடுத்து மோதவிட்டு வருகிறது. இரண்டு முறையுமே அண்ணன் மகாராஜன் தான் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார். ஆனாலும் அசராத தம்பி லோகிராஜன், ஹாட்ரிக் முயற்சியாக இந்தத் தேர்தலிலும் அண்ணனோடு மோத ஆயத்தமாகி வருகிறார்.
இம்முறை தொகுதி தங்களுக்குச் சாதகமாக இருப்பதாகச் சொல்லும் லோகிராஜனின் ஆதரவாளர்கள், “திமுக வில் எம்.பி-யான தங்கதமிழ்ச் செல்வனும் மகாராஜனும் பொது இடத்தில் ஒருமையில் ‘நவரசமாய்’ பேசிக்கொள்ளும ளவுக்கு ஒருவருக்கு ஒருவர் உள்ளடி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்த பிரச்சினையிலும் இருவரும் நேரடியாக மோதிக் கொண்டனர். அடுத்ததாக, தங்கதமிழ்ச்செல்வன் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பேனரை கிழித்தும் சிலர் உட்கட்சி மோதலுக்கு உரம்போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது எங்குபோய் முடியும் என்றும் தெரியவில்லை.
அதேசமயம், அதிமுக தரப்பில் ஓபிஎஸ் இருந்த போது நிர்வாகிகள் பலரும் சுதந்திரமாகச் செயல் படமுடியாத அளவுக்கு அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். இப்போது அப் படியான நிலை இல்லை. போதாதுக்கு, தேனி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாள ராக முறுக்கோடை ராமரை நியமித்திருக்கிறார் இபிஎஸ். அந்தக் காலத்து அரசியல்வாதியான ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள உள்காட்டுப் பகுதியில் செல்வாக்கான மனிதர். இப்போது மாவட்டச் செயலாளராக வந்திருப்பதன் மூலம், தனது செல்வாக்கை நிரூபித்துக் காட்டுவதற் காக லோகிராஜனை அவர் ஜெயிக்க வைத்துக் காட்டுவார். இம்முறை அண்ணன் மகாராஜனின் மகிமை எல்லாம் ஆண்டிபட்டியில் எடுபடாது” என்றனர்.
ஆக, ஆண்டிபட்டியில் அண்ணன் மகா ராஜன் ஹாட்ரிக் வெற்றியை தரப் போகிறாரா… அல்லது தம்பி லோகிராஜன் ஹாட்ரிக் தோல்வியைப் பெறப்போகிறாரா என்பது உள்காட்டுக்கு ராஜாவான முறுக்கோடை ராமரின் கையில் தான் இருக்கிறது!