ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்! ஆனால், முட்டி மோதிக் கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களுக்குச் சாட்டையடி கொடுத்து பாடமெடுக்கும் கடத்தல் வில்லன் என எங்கும் கிளிஷே சாயங்களே தென்படுகின்றன.
இரண்டாவது எபிசோடில், தந்தை – மகள் உறவை வைத்து ஆடை சுதந்திரம் பற்றி பேச முயன்றதெல்லாம் ஓகே. ஆனால், அதில் ‘இடம் பொருள் ஏவல்’ எனப் பல்டி அடித்திருப்பது பூமரிசத்தின் மற்றுமொரு முகமே.
மகளின் விருப்பமும், தந்தையின் பிடிவாதமும் ஒன்றல்ல பாஸ்! ஆடை சுதந்திரம் என்று பேசத் தொடங்கிவிட்டு, மீண்டும் பெண்களையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது எவ்வகை நியாயம்?
மூன்றாவது எபிசோடில், ஃபேண்டஸி முடிச்சுகளை ஆங்காங்கே தூவி கதையைச் சுவாரஸ்யமாகப் பின்னி தேவையான சிக்னலை எட்டிப் பிடிக்கிறார் இயக்குநர். ஆனால், இக்காலத்தில் உண்மையான காதலே இல்லை என்றெல்லாம் சுற்றுவது அபத்தம். மேலும், அதிர்ச்சிகரமான டிவிஸ்ட்களுக்காக, ஆறடிக்கு ஆறேழு டிவிஸ்ட்களை நிரப்பியிருப்பது மைனஸ்.
விஜயகாந்த் ஜெயந்தி, 2050-ல் முதல்வர் சிவகார்த்திகேயன், எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சேதுபதி என்பது போன்ற பல வசனங்களை திரைக்கதையில் வம்படியாகச் சேர்த்துவிட்டிருக்கிறார் இயக்குநர். அவற்றில், சில நம் பல்ஸைப் பிடித்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அவை நமக்கு சலிப்பையே உண்டாக்குகின்றன.

மார்டன் பெண்களின் குணமும், எண்ணங்களும் இப்படியானதாகத்தான் இருக்கும் எனப் பார்வர்ட் மெசேஜ்கள் கொண்டு முதிர்ச்சியின்றி கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதும், மேம்போக்கான வகையில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதும் தவறான போக்கு.
கதையைப் புதுமையாகக் கையாள்வதிலும், அரசியல் தெளிவுக் கொண்ட கதாபாத்திர வடிவமைப்பு, வசனங்கள் அமைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இந்த ‘ஹாட்ஸ்பாட் – 2’ ஜனரஞ்சகமானதாக அனைவருக்கும் கனெக்ட் ஆகியிருக்கும்.