உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் பங்கேற்ற பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
ஹாத்ரஸ் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் முடிந்து மக்கள் கலைந்து செல்லும்போது நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, இதுவரை 122-ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு கொத்துக்கொத்தாக மக்கள் பலியாக காரணமாக இருந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் உரையாற்றியவர் போலே பாபா. யார் இவர்?
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் – எடா மாவட்டங்களின் எல்லைப் பகுதியான புல்ராய் கிராமத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா தலைமையில் இன்று (ஜூலை 2) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
திறந்த வெளியில் சொற்பொழிவுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பந்தல் அமைத்துள்ளனர். வெயில் மற்றும் புழுக்கத்தின் காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலர் அவதியுற்றதாக கூறப்படுகிறது.
நிகழ்வு முடிந்ததும், ஆயிரக்கணக்கான மக்கள் அந்த இடத்தின் குறுகிய வாயில்களை விட்டு வெளியேறத் தொடங்கினர். அதே நேரத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போலே பாபாவை பின் கதவின் வழியாக அழைத்துச் செல்லத் தொடங்கினர். அப்போது, அங்கு ஏற்கனவே கடந்து சென்ற ஆயிரக்கணக்கான மக்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் பின்னால் வந்த கூட்டம் அலைமோத, தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், பெண்கள், குழந்தைகள் கீழே விழ, நெரிசலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். சிலர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
குறிகிய வாயிலில் மக்களை அனுப்பியதும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக மக்கள் கூடியதும், அவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்காத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அஜாக்கிரதை போன்றவையே இந்த கோர விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.