ஹாத்ரஸ் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

Dinamani2f2024 072ff16fbdff Db29 44f6 8c6a Dfd1aabf14272fhatras Over Crowd Edi.jpg
Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் நெரிசல் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் இன்று (ஜூலை 2) நடந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்கட்டமாக 27 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

ஹாத்ரஸ் – எடா மாவட்டங்களின் எல்லைப் பகுதியான புல்ராய் கிராமத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், திறந்த வெளியில் பலர் நின்றிருந்ததால், அதிக வெப்பம் மற்றும் புழுக்கத்தின் காரணமாக மக்கள் பலர் அவதியுற்றனர். குறிப்பிட்ட இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. எனினும் வெப்பத்தின் காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் சிரமங்களை சந்தித்துள்ளனர்.

நிகழ்வு முடிந்ததும், ஆயிரக்கணக்கான மக்கள் அந்த இடத்தின் குறுகிய வாயில்களை விட்டு வெளியேறத் தொடங்கினர். அதே நேரத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொற்பொழிவாற்றிய போலே பாபாவை பின் கதவின் வழியாக அழைத்துச் செல்லத் தொடங்கினர். அப்போது, அங்கு ஏற்கனவே கடந்து சென்ற ஆயிரக்கணக்கான மக்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுவே இந்த விபத்துக்கு காரணமாகவும் கருதப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய சிக்கந்தர ராவ் காவல் நிலைய மூத்த அதிகாரி அனிஷ் குமார், அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததே நெரிசல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

பேருந்தில் கொண்டுசெல்லப்படும், நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்கள்

பாதிக்கப்பட்ட மக்கள் எடா மாவட்ட எல்லையிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஹாத்ரஸ் மாவட்ட மருத்துவமனைக்கு சிலரும், அலிகார் மருத்துவமனைக்கு சிலரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். எல்லையோர (சிக்கந்தர ராவ் பகுதி) மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால், அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்தோரில் பலரை மருத்துவமனை நிர்வாகம், தரையிலேயே படுக்க வைத்துள்ளது. உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் உடல்களை பாதுகாத்தவாறு சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *