ஹார்முஸை முடக்கும் அமெரிக்க முடிவு: `எதிர்க்கும் உலக நாடுகள்' – மீண்டும் பின்னடைவில் ட்ரம்ப்!

Spread the love

ஈரான் – இஸ்ரேலுக்கு இடையிலான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது அமெரிக்கா. இறுதியில் இது ஈரான் – அமெரிக்கா போர் எனப் பேசும் அளவு இரு நாடுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இதன் உச்சமாக உலக நாடுகளுக்கு எண்ணெய் கொண்டுச் செல்லப் பயன்படுத்தப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. அதை விடுவிக்கப்போவதாக அறைகூவல் வித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் ஆலோசனையின் பேரில் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தார். ஈரானும் அதற்கு உடன்பட்டது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது கைகூடவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தியில் நுழையும் மற்றும் அதில் இருந்து வெளிவரும் கப்பல்களைத் தடுக்க அங்கே உடனடியாக அமெரிக்க கப்பற்படை நிறுத்தப்படுகிறது. அப்போதுதான் ஒருகட்டத்தில் அனைத்து கப்பல்களுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியும். சட்டத்திற்குப் புறம்பாக, ஈரானுக்கு சுங்க வரி கட்டி ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களைத் தடுக்க அமெரிக்க கப்பற்படைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். எங்கள் மீதோ, அமைதியாகப் பயணிக்கும் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால், அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் என ட்ரம்ப் எதிர்பார்த்த நிலையில், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரும் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவத்துக்கு அளித்தப் பேட்டியில், “அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஈரானுக்கு எதிரான அமெரிக்கா – இஸ்ரேல் போருக்குள் ஐக்கிய இராச்சியம் இழுத்துச் செல்லப்படுவதை நான் விரும்பவில்லை. அமைதி காலத்தில் உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்த மூலோபாய நீர்வழிப்பாதையை முழுமையாகத் திறப்பதே எங்களது நோக்கம்,” என்று தெரிவித்தார்.

இம்மானுவேல் மக்ரோன் -  கீர் ஸ்டார்மர்
இம்மானுவேல் மக்ரோன் – கீர் ஸ்டார்மர்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், “ஹர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை மீட்டெடுக்க பிரான்ஸும் பிரிட்டனும் இணைந்து ஒரு மாநாட்டை நடத்தும்” என்று அறிவித்துள்ளார். ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோப்லஸ், “ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை எந்த அர்த்தமும் தராத ஒன்று. இது நிலைமையை மேலும் மோசமாக்கும்” என்று விமர்சித்துள்ளார். சீனா, “சர்வதேச வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பைப் பேணுவது உலக நலனுக்கு உகந்தது. அமெரிக்கா மீண்டும் போரை மூட்ட வேண்டாம்” என எச்சரித்துள்ளது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஜலசந்தியை விரைவில் திறக்க வேண்டும் என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *