‘ஹார்முஸ் நீரிணை’ வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டண வசூல்: டாலருக்கு பதில் ரியாலுக்கு அனுமதி – Kumudam

Spread the love

கடந்த மாதம் 28-ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் இடையே கடும் போர் நடந்து வருகிறது. ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் உலக நாடுகளுக்கு தேவையான 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 25 சதவீத இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியை தனது ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான், அங்கு பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை வழங்கி வருகிறது. 

ஈரான் நாடாளுமன்ற பாதுகாப்பு குழு ‘ஹார்முஸ் நீரிணை மேலாண்மை திட்டம்’ என்ற புதிய கொள்கைக்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய விதியின்படி, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் இனிமேல் அமெரிக்க டாலருக்கு பதிலாக ஈரானிய ரியால் மூலம் மட்டுமே சேவை கட்டணங்களை செலுத்த வேண்டும். இதற்காக ஒரு கப்பலுக்கு சுமார் 2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய ரியால் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஜலசந்தி வழியாக செல்லும் சர்வதேச கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புதிய சட்டத்தின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டு கப்பல்கள் இந்த வழியாக செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும், ஈரானுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக பொருளாதார தடைகளை விதித்துள்ள நாடுகளின் கப்பல்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஓமன் நாட்டுடன் இணைந்து இதற்கான சட்டப்பூர்வ கட்டமைப்புகளை ஈரான் உருவாக்கி வருகிறது. 

இந்த புதிய நடைமுறையின்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை ‘நட்பு நாடுகள்’ என்று ஈரான் வகைப்படுத்தியுள்ளது. இந்த நாடுகளின் கப்பல்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் வழித்தடத்தில் பாதுகாப்பாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு அல்லது பாதுகாப்பின் கீழ் இந்த கப்பல்கள் செல்லலாம். ஆனால், அதற்கு முன்னதாகவே ஈரான் அதிகாரிகளிடம் பயணத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதேவேளையில், தனது எதிரி நாடுகளாகக் கருதும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் முற்றிலும் தடை விதித்துள்ளது. அந்த நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளின் கப்பல்களும் இந்த வழியாக செல்ல அனுமதி இல்லை. மற்ற நடுநிலை நாடுகளின் கப்பல்கள், ஈரானின் எதிரி நாடுகளுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதுகுறித்து ஈரான் அதிகாரிகள் கூறுகையில், ‘சூயஸ் கால்வாய் அல்லது பனாமா கால்வாய் போன்றே எங்களுடைய ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் கட்டணம் செலுத்துவது இயற்கையானது. போருக்கு என்று சில செலவுகள் உள்ளன. சர்வதேச சந்தையில் எங்களுடைய தேசிய நாணயத்தை வலுப்படுத்தவும், மேற்கத்திய நிதி அமைப்புகளை தவிர்க்கவும் இந்த நீண்டகால திட்டம் செயல்படுத்தப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *