சமீபத்தில் நடைபெற்ற “உதரிங் ஹைட்ஸ்’ (Wuthering Heights) திரைப்பட விழாவிற்காக ஹாலிவுட் நட்சத்திரம் மார்கோட் ராபி அணிந்து வந்த அந்த வைர நெக்லஸ், வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்கப்படாமல், 400 ஆண்டுகால இந்திய வரலாற்றின் உன்னதமான பக்கங்களை உலகிற்கு மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.
‘தாஜ்மஹால்’ நெக்லஸ்
இந்த நெக்லஸின் இதயம் போன்ற பதக்கத்தில் ‘தாஜ்மஹால்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, இது பார்ப்பதற்கு ஏதோ நவீன வடிவமைப்பு என்று தோன்றினாலும், இதன் உண்மையான பூர்வீகம் முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் காலத்தைச் சேர்ந்தது.
1627-ஆம் ஆண்டு வாக்கில், மன்னர் ஜஹாங்கீர் தனது பேரன்பிற்குரிய மனைவியான நூர்ஜகானுக்காக இந்த வைரத்தைப் பிரத்யேகமாக உருவாக்கினார். பாரசீக மொழியில் நூர்ஜகானின் பெயர் பொறிக்கப்பட்ட இந்த வைரம், அக்காலத்தின் மிகச்சிறந்த ‘டேபிள்-கட்’ முறையில் செதுக்கப்பட்டு, நான்கு மூலைகளிலும் சிறிய ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டது.
இந்த நெக்லஸின் பயணம் நூர்ஜகானுடன் நின்றுவிடவில்லை; அது ஒரு காதலின் அடையாளமாக அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டது. ஜஹாங்கீருக்குப் பிறகு அரியணை ஏறிய அவரது மகன் ஷாஜகான், இந்த அரிய வைரத்தை தனது மனதிற்கு இனியவளான மும்தாஜ் மகாலுக்குப் பரிசாக வழங்கினார்.
உலகமே வியந்து பார்க்கும் தாஜ்மஹால் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே, இந்த வைரம் மும்தாஜின் கழுத்தை அலங்கரித்தது. உண்மையில், மும்தாஜின் மரணத்திற்குப் பிறகு அவர் நினைவாக ஷாஜகான் எழுப்பிய தாஜ்மஹாலின் நான்கு கோபுரங்களைப் போன்றே, இந்த நெக்லஸின் நான்கு முனைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது வியக்கத்தக்க வரலாற்று ஒற்றுமையாகும்.