ஹாஸ்டல்களுக்கு சொத்து வரி கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | The High Court has quashed the order issued to pay property tax on hostels

Spread the love

சென்னை: ஹாஸ்டல்கள் என்பது வணிக கட்டிடங்கள் அல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்தக் கூறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்களுக்கான ஹாஸ்டல்களுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை செலுத்தக் கூறி, சென்னை, கோவை மாநகராட்சிகளின் சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி, ஹாஸ்டல் உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை விதித்தால், அதை, ஹாஸ்டலில் தங்குவோரிடம் தான் வசூலிக்க வேண்டியிருக்கும் என மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபர்ணா நந்தகுமார் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் நிலையில் இல்லாதவர்கள் தான் ஹாஸ்டல்களில் தங்குகின்றனர். அதனால், ஹாஸ்டல்கள், குடியிருப்பு கட்டிடங்கள் தானே தவிர, வணிக கட்டிடங்களாக கருத முடியாது எனக் கூறி, வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை செலுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், ஹாஸ்டல்களுக்கு குடியிருப்புக் கட்டிடங்களுக்கான வரியை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *