தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்குர் சிம்லா, குலு மற்றும் மந்தி மாவட்டங்களில் மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவரிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் குலு, மந்தி மற்றும் சிம்லா ஆகிய மூன்று மாவட்டங்களில் மேக வெடிப்பினால் ஏற்பட்ட மழை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ஹிமாசலில் இந்தத் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 8 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்னும் 45 பேரைக் கண்டறியும் முயற்சியில் மீட்புப் படையினர் ட்ரோன்களை பயன்படுத்தி தேடி வருகின்றனர்.
குலு பகுதியில் உள்ள ஸ்ரீகாந்த் மகாதேவா பகுதியைச் சுற்றி சிக்கித் தவிக்கும் சுமார் 300 பேர் பத்திரமாக இருப்பதாகவும், மலானா பகுதியில் சிக்கிய 25 சுற்றுலாப் பயணிகளை உள்ளூர் மக்கள் கவனித்துக் கொண்டதாகவும் தலைமைச் செயலாளர் பிரபோத் சக்சேனா தெரிவித்துள்ளார்.
மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்த பிரதமர், நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபடுமாறு கட்சித் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டதாக ஜெய்ராம் தாக்குர் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவைத் தொடர்பு கொண்டு, மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்ததாக தாக்கூர் கூறினார்.
இதற்கிடையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட தனியே குழு அமைத்துள்ள ஹிமாச்சலப் பிரதேச பாஜக தலைவர் ராஜீவ் பிண்டல், தனது குழுவினருடன் ராம்பூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.
மேலும் குலு மற்றும் மந்தி பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குழு பார்வையிட்டதாகவும் தாக்கூர் தெரிவித்துள்ளார்.