பா.ரஞ்சித்தின் “காலா’, ‘சார்பட்டா பரம்பரை’, தனுஷின் ‘கர்ணன்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களின் கலை இயக்குநராகப் பணியாற்றிய த.ராமலிங்கம், இப்போது டைரக்டராக புரொமோஷன் ஆகிறார். சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் ‘காந்தா’வில்கூட இவரது ஆர்ட் டைரக்ஷன் பேசப்பட்டது. அடிப்படையில் தெருக்கூத்து கலைஞரான ராமலிங்கம், அதன் பின் ஓவிய கல்லூரியில் பயின்றவர். இப்போது அரை டஜன் படங்களுக்கு ஆர்ட் டைரக்ஷனை கவனித்து வருகிறார். அவர் படம் இயக்குவது உண்மைதானா? ஹீரோவாக சாண்டி நடிக்கிறாரா என்பது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி…
தமிழ் சினிமாவில் ‘பீரியட் ஃபிலிமா? கூப்பிடுங்க ராமலிங்கத்தை’ என பெயரெடுத்தவர் கலை இயக்குநர் ராமலிங்கம். ‘கேப்டன் மில்லர்’ படத்தில்கூட பரந்து விரிந்திருந்த பழங்குடி கிராமம், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட போராளிகள், ஆயுதங்கள், வாகனங்கள், பிரமிக்க வைக்கும் கோயில் என அன்றைய காலத்தை உயிர்ப்போடு கொண்டு வந்து கவனம் ஈர்த்திருந்தார். அடுத்து பாண்டிராஜின் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடித்து வரும் பெயரிடப்படாத படம், கௌதம் ராம் கார்த்திக், லீனா மணிமேகலை இயக்கத்தில் ஒரு படம் எனப் பல ப்ராஜெக்ட்களைக் கையில் வைத்துள்ளார்.

சரி விஷயத்திற்கு வருவோம். அவர் இயக்குநர் ஆவது உண்மைதான். டான்ஸ் மாஸ்டர் கம் நடிகரான சாண்டியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். ‘லியோ’, ‘லோகா’ படங்களின் வெற்றிக்குப் பின் சாண்டி பல படங்களில் நடித்தும், நடன இயக்குநராகவும் இயங்கி வருகிறார். ராமலிங்கம் உருவாக்கியிருக்கும் கதைக்கு சாண்டி பொருத்தமானவராகத் தோன்றவே, சாண்டியிடம் பேசியிருக்கிறார் ராமலிங்கம். சாண்டி முழுக்கதையையும் கேட்டுவிட்டு, நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இந்தப் படத்தை ஏப்ரலில் தொடங்க திட்டமிட்டு வருகின்றனர். அப்பா – மகன் இருவருக்குமிடையேயான ஒரு எமோஷனலான கதை இது என்றும், முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் கதை என்றும் சொல்கிறார்கள். கலை இயக்கப் பணிகளுக்கிடையே தன் படத்துக்கான ஸ்கிரிப்ட்டையும் இன்னொரு பக்கம் தீவிரமாக எழுதி வருகிறார் ராமலிங்கம்.