கடற்கரை, வணிக வீதிகள், சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தவறாமல் இடம்பிடிப்பவை `ஹீலியம்” வாயுவால் நிரப்பப்பட்ட பலூன்கள்.
குழந்தைகள் மட்டுமல்ல பல நேரங்களில் பெரியவர்களும் அந்தப் பலூன்களின் அழகில் தொலைந்து போவார்கள். அந்தப் பலூன்களை நிரப்பும் `ஹீலியம்’ சிலிண்டர்கள் சமீபகாலமாக வெடிகுண்டுகளாக மாறி அப்பாவி மக்களைக் காவு வாங்கி வருகின்றன.
சம்பவம் – 1
திருச்சி தெப்பக்குளத்தைச் சுற்றி நிரந்தரக் கடைகளும், தற்காலிகக் கடைகளும் இருக்கும். அதனால் அந்தப் பகுதி எப்போதும் மக்கள் நெரிசலுடன் காணப்படும்.
2022 அக்டோபர் 2-ம் தேதி இரவு படுபிஸியாக இயங்கிக் கொண்டிருந்தன தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகள்.

அங்கிருந்த பிரபல ஜவுளிக் கடை ஒன்றின் வாசலில் ஹீலியம் சிலிண்டருடன் நின்று கொண்டிருந்த உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனார்சிங், பலூன்களுக்குள் ஹீலியம் வாயுவைச் செலுத்தி விற்பனை செய்து கொண்டிருந்தார்.
பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது அந்த ஹீலியம் சிலிண்டர். அப்போது அந்தப் பக்கமாகச் சென்ற சின்னதாராபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆறுமாதக் குழந்தை உட்பட சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த விபத்தில் சிக்கி, படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். தப்பித்து ஓடிய பலூன் வியாபாரி அனார்சிங் அதன்பிறகு கைது செய்யப்பட்டார்.