இந்த நிலையில், அமெரிக்காவிற்கு வரும் மருத்துவர்களுக்கு ஹெச்1-பி விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறுகையில், “அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்படவுள்ளன. அதில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.
ஹெச்-1பி விசா கட்டண உயர்வு அமெரிக்காவின் மருத்துவத்துறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்ற கருத்துகள் எழுந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
அமெரிக்காவில் சுமார் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் மருத்துவர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதாக ஃபெடரலின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேயோவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விசாக்கள் உள்ளன. இதனால், கட்டண உயர்வு பணியாளர்களை மட்டுமின்றி, மக்களையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.