மதுரை: கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்துகளை வழக்கில் இணைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
துபாயைச் சேர்ந்த முகம்மது யூசுப் சவுகத் அலி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘நாங்கள் கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். தற்பது துபாயில் குடியுரிமை பெற்று வசித்து வரும் இந்தியர்கள். கடந்த 2020-ம் ஆண்டு எனது மனைவி, மகள், மருமகன் ஆகியோர் இந்தியாவிற்கு வந்தனர். அப்போது கரோனா ஊரடங்கு அமலில் இருந்தது.
அப்போது கும்பகோணத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேசன், சுவாமிநாதன், அவரது நண்பர்கள் ரகு ஆகியோர் தாங்கள் வெளிநாடுகளில் ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருவதாகவும், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் நிதி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் எனது மனைவியிடம் கூறியுள்ளனர்.
அவர்களின் நிறுவனத்தில் நிதி முதலீடு செய்தால் இரு மடங்காக திரும்ப தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதனை நம்பி எனது மனைவி ரூ 10 கோடி முதலீடு செய்துள்ளார். பணத்தை திரும்ப கேட்டபோது கூடுதலாக ரூ.1 கோடியை பெற்றனர். அதற்கு பதிலாக அவர்கள் அளித்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்கள் எங்களைப் போலவே பலரை ஏமாற்றி உள்ளனர். சகோதரார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் போலீஸார் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே மோசடி செய்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சம்பந்தப்பட்ட நபர்கள் நிதி நிறுவனம் நடத்தி 500 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளார்கள். இதுகுறித்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். சில சொத்துகளையும் பறிமுதல் செய்துள்ளார்கள். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை இதுவரை இந்த வழக்கில் இணைக்கவில்லை.
எனவே தமிழக அரசு மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கில் இணைக்கும் நடவடிக்கையை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்” என வாதிட்டார்.இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “2023-ம் ஆண்டு சொத்துகளை பறிமுதல் செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த சொத்துகளை இந்த வழக்கில் இணைப்பதற்க்கு அரசுக்கு குறிப்பாணை அனுப்பி உள்ளனர்.
ஆனால், இதுவரை சொத்துகளை வழக்கில் இணைப்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், பணம் ஆகியவற்றை வழக்கில் இணைக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் இரண்டு மாதங்களில் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.