‘₹’-க்குப் பதிலாக 'ரூ' குறியீடு: தேசிய சின்னத்தை நிராகரித்துள்ளது திமுக அரசு! -நிர்மலா சீதாராமன்

Dinamani2f2025 02 052futus6cxx2fc 1 1 Ch0820 10698618.jpg
Spread the love

தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் ‘₹’ குறியீட்டிற்குப் பதிலாக ‘ரூ’ என மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு மத்திய அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை(மார்ச் 14) காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை(மார்ச் 13) வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் கடந்த ஆண்டுகளில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக ‘ரூ’ என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது.

பிற மொழியைத் தவிர்த்து தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இலச்சினையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் ‘₹’ குறியீட்டிற்குப் பதிலாக ‘ரூ’ என மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு மத்திய அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை(மார்ச் 13) கூறியிருப்பதாவது : நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான ‘₹’ ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது. திமுகவிற்கு உண்மையிலேயே ‘₹’ உடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோது, ​​இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

‘₹’ – இந்தச் சின்னத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ என். தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.

மேலும், ரூபாய் என்ற வார்த்தை ‘வெள்ளியால் செய்யப்பட்ட’ அல்லது ‘வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்’ என்று பொருள்படும் ‘ருப்யா’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, ‘ரூபாய்’ என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது. இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக ‘ரூபாய்’ அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன.

‘ரூபாய்’ என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது. ரூபாய் சின்னம் ‘₹’ என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. யூபிஐ பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா? தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள்.

மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது. இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல – இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *