சென்னை: பணி மேம்பாட்டு ஊதியம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை, அரசு உதவிபெறும் கல்லூரிகளின் ஆசிரியர்கள் 3 நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) மற்றும் மதுரை காமராஜர், மனோன்மணீயம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (மூட்டா) சார்பில், அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 தொடர் காத்திருப்பு போராட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று தொடங்கியது.
அரசு நிதியுதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு திட்ட (சிஏஎஸ்) ஊதியம் மற்றும்அதற்குரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது, யுஜிசி நெறிமுறைகளின்படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எம்ஃபில் மற்றும் பிஎச்டி பட்டத்துக்கான ஊக்க ஊதியம் வழங்குவது, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்பட 10 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, இந்த தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.
ஏயுடி தலைவர் பேராசிரியர் ஜெ.காந்திராஜ் தலைமையுரை ஆற்றிப் பேசும் போது, “அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனாலும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருந்து வருகிறது. தற்போது நடைபெறும் 3 நாள் தொடர் போராட்டத்துக்குப் பின்னரும் அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக டிச. 8-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டமும், அதைத் தொடர்ந்து மாணவர்களை ஈடுபடுத்தி போராட்டமும் நடத்தப்படும்” என்றார்.
போராட்டத்துக்கு ஆதரவு: இதற்கிடையே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.