திருச்சி: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு, ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கோர்ட்யார்ட் மாரியார்ட் ஓட்டலில் பிரதமர் தங்கினார்.
தொடர்ந்து, நேற்று காலை 11.10 மணியளவில் ஓட்டலில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். மேஜர் சரவணன் சாலை, பாரதிதாசன் சாலை, தலைமை அஞ்சல் நிலைய ரவுண்டானா, குட்ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம் வழியாக சென்று 11.31 மணிக்கு விமான நிலையம் சென்றடைந்தார். வழிநெடுகிலும் சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் இருந்தவாறு அவர்களை பார்த்து பிரதமர் கையசைத்தார்.
காலை 11.45 மணிக்கு ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். முன்னதாக, விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை, அமைச்சர் கே.என்.நேரு, ஆட்சியர் வே.சரவணன், மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமர் வருகையை முன்னிட்டு, திருச்சி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல, கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரி ஏரியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடு தளத்தில் இருந்து விழா நடைபெற்ற கோயில் வளாகம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ சென்றார். அங்கும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.