பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் சமூக வலைதள கணக்கை 10 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.
இதன்மூலம் எக்ஸ் தளப் பக்கத்தில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் (ஃபாலோயர்ஸ்) அரசியல் தலைவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்தார்.
இந்தியாவின் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் பல மடங்கு நபர்களால் பின்தொடரப்படும் நபராக மோடி உள்ளார்.
எக்ஸ் தளப் பக்கத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை 2.64 கோடி பேரும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை 2.75 கோடி பேரும், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை 1.99 கோடி பேரும் பின்தொடர்கிறார்கள்.
இவர்களுக்கு அடுத்தபடியாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவை 63 லட்சம் பேரும், அவரின் மகன் தேஜஸ்வி யாதவை 52 லட்சம் பேரும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை 29 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.
உலக அளவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல முக்கியத் தலைவர்களை விட அதிக நபர்கள் பின் தொடரும் அரசியல் தலைவராக மோடி உள்ளார். ஜோ பைடனுக்கு 3.81 கோடி நபர்கள் மட்டுமே பின்தொடர்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3 கோடி பேர் அதிகம் பின்தொடர்பவர்களாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.