விலைவாசி போற நிலைமையில, 10 ரூபாய்க்கு சாப்பாடுனு யாராவது சொன்னா எப்படி இருக்கும். அதெல்லாம் சாத்தியம் இல்லனு சொல்லுவோம்… 10 ரூபாய்க்கு ஒரு தம்பதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாப்பாடு கொடுத்து வர்ராங்கானு கேள்விபட்டா, அவங்கள எப்படி சந்திக்காம இருக்க முடியும்..
சேலம், செவ்வாய் பேட்டையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘பத்து ரூபாய் சாப்பாட்டு கடை’யை நடத்திவரும் தம்பதியினரான ரவி தங்கதுரை, விஜயலட்சுமி அவர்களை நேரடியாக சென்று சந்தித்தோம்…
“எதற்காக இந்த பத்து ரூபாய் சாப்பாட்டு கடை?”
“இந்த சுற்றுவட்டாரத்தில் நிறைய கூலி தொழிலாளர்கள் இருக்காங்க. தினசரி சம்பளத்தில வயிறு நிறைய சாப்பிட முடியாத நிலை.
ஒரு டீயும், ஒரு போண்டாவும் சாப்பிட்டு பசியை அடக்கிக்கொள்றத நான் கண்கூடாக பார்த்தேன்,” என்கிறார் ரவி தங்கதுரை.
ஒரு போட்டோகிராபராக இருக்கும் அவர், நண்பர்களுடன் சேர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்து வந்திருக்கிறார்.

ஆனால், அதுவே அவருக்குள் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
“நாம அன்னதானம்னு சொல்லிட்டு மக்களை சோம்பேறியாக்குறோமா?
இலவசம்னா உணவு வீணாகுதே… அந்த மன வருத்தத்தோட வெளிப்பாடுதான் இந்த பத்து ரூபாய் சாப்பாட்டு கடை.”
இந்த கடை தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இயங்குகிறது.

`10 ரூபாய் கொடுத்தால், பசி தீரும் அளவுக்கு உணவு”
மூத்த குடிமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள்,கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களிடமிருந்து ஒரு ரூபாய்கூட வாங்கப்படுவதில்லை.
இன்று ஒரு நாளைக்கு சுமார் 400 பேர் இங்கு உணவருந்துகிறார்கள்.