ராமர் கோயிலும் அயோத்தி நகரமும் மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இந்த புனித நிகழ்வுக்காக அயோத்தி நகரம் முழுவதையும் அலங்கரிக்க 100 டன் பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
விவாஹ பஞ்சமி தினத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி காலை 9 மணிக்குப் பிறகு தொடங்கி, பிற்பகல் 2 மணியளவில் நிறைவடையும். அதன்பிறகு, விருந்தினா்களுக்கான சிறப்புத் தரிசனம் தொடங்கும். பாதுகாப்புக் கருதி, அன்றைய நாளில் மக்களுக்கான வழக்கமான தரிசனம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்படவுள்ள காவிக்கொடி 22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டது; உறுதியான பாராசூட் துணி மற்றும் பட்டு நூலால் ஆனது. 42 அடி உயரம் கொண்ட கம்பத்தில் 360 கோணத்திலும் சுழலும் வகையில் பொருத்தப்படும் முக்கோண வடிவிலான கொடியில் சூரியன், ஓம் மற்றும் மந்தாரை மரம் போன்ற புனிதச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனை முன்னிட்டு, அயோத்தி நகரம் முழுவதும் காவிக்கொடிகள், தோரணங்கள் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
