“100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களை சுரண்டுகிறது தமிழக அரசு” – அன்புமணி | DMK Election Promises full of Scam: Anbumani Ramadoss Criticize

1376262
Spread the love

சென்னை: மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொழிலாளர்களை தமிழக அரசு சுரண்டி வருவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இதுவரை வெறும் 9 நாள்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு மிகக்குறைந்த நிதியை மட்டுமே வழங்கியுள்ள நிலையில், அதை எதிர்க்கவும், கூடுதல் நிதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொழிலாளர்களை தமிழக அரசு சுரண்டி வருவது கண்டிக்கத்தக்கது.

கிராமப்புற பொருளாதரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பணியாற்ற பதிவு செய்துள்ள குடும்பங்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 100 நாள்கள் வரை வேலை வழங்க முடியும். ஆனால், இந்தத் திட்டத்தின்படி தமிழகத்துல் நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 9.27 நாள்கள் மட்டும் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கோரி தமிழகத்துல் 85.70 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்திருக்கின்றன. அவர்களில் 74.95 லட்சம் குடும்பங்கள் தொடர்ந்து பணி செய்து வருகின்றன. எனினும், அவர்களில் 30.30 லட்சம் குடும்பங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ஒரு நாள் கூட வேலை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை தொடர்ந்தால், நடப்பாண்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 20.61 நாள்கள் மட்டுமே வேலை வழங்க முடியும்.

ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 150 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதில் ஏழில் ஒரு பங்குக்கும் குறைவாகவே வேலை வழங்குகிறது. இது கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி ஆண்டில் வழங்கப்பட்ட 50.22 நாள் வேலையை விட 60% குறைவு ஆகும்.

கடந்த 2023-24-ம் ஆண்டில் 4 லட்சம் குடும்பங்களுக்கு 100 நாள்கள் வேலை வழங்கப்பட்ட நிலையில், அது கடந்த ஆண்டில் 1.18 லட்சம் குடும்பங்களாக குறைந்து விட்டது. நடப்பாண்டில் நிலைமை மேலும் மோசமடைந்து இதுவரை வெறும் 346 குடும்பங்களுக்கு மட்டும் தான் 100 நாள்கள் முழுமையாக வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் ஆண்டின் இறுதியில் 1,000 குடும்பங்களுக்குக் கூட 100 நாள் வேலை வழங்க முடியாது. அதுமட்டுமின்றி, சராசரி ஊதியத்தின் அளவும் கடந்த ஆண்டை விட ரூ.15 குறைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு காரணம் திமுக அரசின் அலட்சியமும், துரோகமும் தான். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு 12 கோடி மனித வேலை நாள்கள் மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்டதை விட மிகவும் குறைவு ஆகும். 2020-21 ஆண்டில் 33.39 கோடி, 2021-22ம் ஆண்டில் 34.57 கோடி, 2022-23ம் ஆண்டில் 33.46 கோடி, 2023-24ம் ஆண்டில் 40.87 கோடி, 2024-25ம் ஆண்டில் 30.61 கோடி மனித நாள்கள் வேலை வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு தான் இந்த முறை தமிழகத்திற்கு வேலை நாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது போதுமானதல்ல; இதை ஏற்க முடியாது.

ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக மக்களுக்கு 150 நாள்கள் வேலை பெற்று தருவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, மனித வேலை நாள்கள் குறைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

தமிழகத்திற்கு 12 கோடி மனித வேலை நாள்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏப்ரல் 20ம் தேதி அறிக்கை வெளியிட்ட பாமக ஒவ்வொரு குடும்பத்திற்கு சராசரியாக 50 நாள்களாவது வேலை வழங்கும் வகையில் 43 கோடி மனித நாள்கள் வேலை வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிவடையவுள்ள நிலையில் வேலை நாள்களை அதிகரிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் கூட எழுதவில்லை.

மாறாக, மத்திய அரசு ஒதுக்கியுள்ள மனித நாள்களுக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு வழங்கப்படும் வேலை நாள்கள் குறைக்கும்படி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு திமுக அரசு ஆணையிட்டுள்ளது. அதனால் தான் கடந்த ஆண்டு இதே காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 35 நாள்கள் வேலை வழங்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் 9 நாள்கள் மட்டும் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது.

இதேநிலை தொடர்ந்தால் ஆண்டின் இறுதி வரை 15.45 கோடி நாள்கள் வேலை வழங்கப்பட வேண்டியிருக்கும். அதையாவது திமுக அரசு வழங்குமா அல்லது 12 கோடி நாள்களைத் தாண்டக் கூடாது என்ற எண்ணத்தில் இனிவரும் நாள்களில் வேலை வாய்ப்பைக் குறைத்து விடுமா என்பது தெரியவில்லை.

வேலை உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு கடந்த 2023- 24ம் ஆண்டில் ரூ.12,136 கோடியும், கடந்த ஆண்டில் ரூ.7,587 கோடியும் தமிழகத்திற்கு ஒதுக்கியது. ஆனால், நடப்பாண்டில் கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக ரூ.5,053 கோடியை மட்டும் தான் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டிற்கும் முந்தைய நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் பாதிக்கும் குறைவு ஆகும்.

ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டம் அல்ல. மனிதத் தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டம் ஆகும். கடந்த காலங்களில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை விட கூடுதல் தொகைக்கு வேலை வழங்கி விட்டு, அதை மத்திய அரசிடமிருந்து பெற்ற வரலாறு உள்ளது. அதே நிலையை இப்போது எடுக்காவிட்டால், மத்திய அரசிடம் இருந்து தமிழகம் பெற வேண்டிய தொகையில் ரூ.10,000 கோடி வரை இழக்க வேண்டியிருக்கும். மாநில அரசின் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறும் திமுக இந்த சிக்கலில் அமைதி காப்பது ஏன் ?

நடப்பாண்டில் ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 74.75 லட்சம் குடும்பங்களுக்கும் சராசரியாக 50 நாள்களாவது வேலை வழங்கும் வகையில் 43 கோடி மனித வேலை நாள்களை பெறவும், அதற்காக ஆகும் ரூ.18,106 கோடி செலவில் மத்திய அரசின் பங்காக ரூ.16,296 கோடியை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *