100 நாள் வேலை திட்டத்தை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடும் அதிருப்தி | Officials do not monitor Mgnrega Scheme says HC

1321783.jpg
Spread the love

மதுரை: தமிழகத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை யாரும் பணிகளை முறையாகக் கண்காணிப்பதில்லை என்று உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த கோபிநாத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அரவக்குறிச்சி குறிகாரன் வலசை, கீழ்பாகம் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள்நடைபெறுகின்றன. கிராமத்தில் இல்லாதவர்கள், வட மாநிலத்தவர், இறந்தவர்கள் மற்றும் வெளியூரில் வசிப்பவர்கள் பணிபுரிந்ததாக கணக்குகாட்டி ஊதியம் பெற்று, மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ரூ.5 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு குழாய் இணைப்புபணிக்கு மாவட்ட ஆட்சியர் ரூ.1,200 கட்டணம் நிர்ணயம் செய்துள்ளார். ஆனால், இங்கு ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஇருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கெளரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அலுவலர்கள் வரை முறையாக கண்காணிப்பது இல்லை.

இதுபோன்ற திட்டங்களில் ஊழல் செய்வதை நோக்கமாக வைத்துள்ளனர். மனு தொடர்பாக மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *