‘12 மணி நேரத்தில் புயல்’ – மிக கனமழை எச்சரிக்கையால் பல மாவட்டங்களில் பள்ளி விடுமுறை | deep depression will turn into cyclonic storm in next 12 hours and schools rain holiday in tn

1341211.jpg
Spread the love

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்​டுள்ள ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

தென்​மேற்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று முன்​தினம் நிலை கொண்​டிருந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்றது. இந்நிலையில், இது அடுத்த 12 மணி நேரங்களில் புயலாக மாறும் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர பகுதி​களில் கனமழை தொடரும். சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்​தில் இன்று அநேக இடங்​களி​லும், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களி​லும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். கடலூர், மயிலாடு​துறை மாவட்​டங்கள் மற்றும் காரைக்​கால் பகுதி​களில் ஓரிரு இடங்​களில் அதிக​னமழை​யும் (ரெட் அலர்ட்), ஒரு சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​ பெய்யக்கூடும்.

சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், அரியலூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், தஞ்சாவூர், புதுக்​கோட்டை மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, பெரம்​பலூர், திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாத​புரம் மாவட்​டங்​களின் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்புள்​ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மழை விடுமுறை: கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கொடைக்கானல், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்று (நவ.27) சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சென்னை​யில் இன்று வானம் பொதுவாக மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும். இன்றும், நாளை​யும் தென்​மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி​களில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிமீ வேகத்​தில் அதிகபட்​சமாக 90 கிமீ வேகத்​தில் வீசக் கூடும். எனவே, இப்பகு​தி​களுக்​கு செல்ல வேண்​டாமென​வும், ஆழ்கடலில் இருக்​கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப​வும் அறிவுறுத்​தப்​படு​கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *