கோவை: கோவை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 121 ஆண்டு கால வழக்கிற்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவையில் ஜூலை 29-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் வழக்கு சம்பந்தப்பட்டவா்கள் உச்சநீதிமன்றத்திற்கு வராமல் அவா்கள் வசிக்கும் அந்தந்த மாவட்டங்களிலேயே அவா்களது வழக்குகளுக்குத் தீா்வுகாணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட வழக்குகளில் கடந்த 1903-ஆம் ஆண்டு கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீட்டிற்கு சென்ற ஒரு சிவில் வழக்கு, கோவை மாவட்ட சமரச தீா்வு மையத்தின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜி.நாராயணன் முன்னிலையில் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்குரைஞா் மற்றும் சமரசா் எம்.பாலசுப்ரமணியத்தின் உதவியோடு அதற்கு தீா்வு எட்டப்பட்டுள்ளது.
பல ஆண்டுகால வழக்கானது முடிவுக்கு வந்துள்ளதோடு, மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தில்லிக்கு அலைய வேண்டிய செலவு இல்லாமல் தங்களுக்கான தீா்வை தங்களது இடத்திலேயே பெற முடிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.