கேரளத்தில் வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால் இன்று (ஜூலை 30) நிலச்சரிவு ஏற்பட்டது. முன்னிரவு 2 மணியளவில் ஒரு நிலச்சரிவும், அதிகாலை 4 மணியளவில் மற்றொரு நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் மக்கள், காவல் துறையினர் உடன் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்திலிருந்து 300 வீரர்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 123 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 128 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேப்படி, முண்டக்கை, சூரல்மாலா, அட்டமாலா, நூல்புழா ஆகிய பகுதிகளில் இரவு நேரத்திலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வயநாடு பகுதியைச் சுற்றிலும் 45 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் உடமைகளை இழந்த 3069 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.